'கட்சியை விட்டு நீக்கினாலும் ஓகே ரைட்'

கன்னியாகுமரி : கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது தொடர்பாக, தளவாய்சுந்தரம் அளித்த பேட்டி:


ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தில் நான் பங்கேற்பது புதிது அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ்., நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறேன். கன்னியாகுமரி தொகுதியில் நடந்ததால், எம்.எல்.ஏ., என்ற அடிப்படையில் அழைப்பு விடுத்தனர்; அதை ஏற்று அணிவகுப்பில் பங்கேற்றேன். இதற்கும் அரசியலுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை.


கட்சிப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி அறிக்கை வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. எனினும், தலைமை எடுத்த முடிவுக்கு கட்டுப்படுகிறேன். நேற்றும் இன்றும் நாளையும் அ.தி.மு.க., தான். அதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.


கட்சியின் கொள்கை, கட்டுப்பாட்டை மீறியோ அல்லது கூட்டணி தொடர்பாகவோ எந்த செயல்பாடுகளிலும் நான் ஈடுபடவில்லை. என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை. நீக்கப்பட்டாலும், 'ஓகே ரைட்' என, சொல்ல வேண்டியது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்கிறது பா.ஜ.,



தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜாவிடம், அ.தி.மு.க.,வில் கட்சி பொறுப்புகளில் இருந்து தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ''தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்,'' என்றார்.

Advertisement