15 ஆண்டுகளில் காங்கிரஸ், பா.ஜ.,; வளர்ந்தது யார்? விழுந்தது யார்?

9


புதுடில்லி: இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை லோக்சபா தேர்தல் நடைபெறுவது போல, அந்தந்த மாநிலங்களிலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் தேசிய கட்சிகளில் பிரதானமாக பார்க்கப்படும் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடந்த 15 ஆண்டுகளில் எந்தளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளன என்பது பற்றிய புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளது.

2009




2009ல் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் மட்டும் 13 மாநிலங்களில் ஆட்சியில் இருந்து வந்தது. அதன் கூட்டணி கட்சிகளான திமுக (தமிழகம்), ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (ஜார்க்கண்ட்), தேசிய மாநாட்டு கட்சி (ஜம்மு காஷ்மீர்) மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்து வந்தது. அப்போது ஆறு மாநிலங்களில் பா.ஜ., தலைமையிலான ஆட்சியும், பஞ்சாப், பீஹாரில் பா.ஜ.,வின் கூட்டணி ஆட்சியும் இருந்தது.

2014




அதுவே 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் வெற்றிப்பெற்ற மோடி, பிரதமராக பொறுப்பேற்றபோது, காங்கிரஸ் வசம் 9 மாநிலங்களும், அதன் கூட்டணி கட்சிகள் வசம் 3 (ஜம்மு காஷ்மீர், பீஹார், ஜார்க்கண்ட்) மாநிலங்களும் ஆட்சியில் இருந்தன. அந்த நேரத்திலும் பா.ஜ., வசம் 6 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. அதன் கூட்டணி கட்சிகள் 4 மாநிலங்களில் ஆட்சி புரிந்தன.

2019




அடுத்து படிபடியாக பா.ஜ.,வின் வளர்ச்சி மேலோங்க, காங்கிரஸ் வசமிருந்த மாநிலங்களின் எண்ணிக்கை குறையத் துவங்கியது. 2019ல் மோடி 2வது முறையாக பொறுப்பேற்றபோது, பா.ஜ., 10 மாநிலங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 9 மாநிலங்களிலும் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்தது. காங்கிரஸ் வெறும் 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்தது. அதன் கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் ஆட்சியை இழந்திருந்தன.

2024




தொடர்ந்து இறங்குமுகமாக இருந்த காங்கிரஸ், 2024ல் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து 'இண்டியா' எனும் கூட்டணியை உருவாக்கியது. அதன் வாயிலாக தற்போது இண்டியா கூட்டணி 7 மாநிலங்களில் ஆட்சியில் இருந்து வருகிறது. மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அதுவே பா.ஜ., 12 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. 8 மாநிலங்களில் பா.ஜ., கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது.



சுருக்கமாக...

புள்ளிவிபரங்களை பார்க்கையில் 2009 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சியே மேலோங்கி உள்ளது. காங்கிரஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த தயவில் தற்போது சில மாநிலங்களில் மீண்டும் கால் பதித்துள்ளது தெரியவருகிறது. அதாவது,

* 2009ல் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என மொத்தம் 8 மாநிலங்களிலும், காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என மொத்தம் 16 மாநிலங்களிலும் ஆட்சி செய்திருந்தது.

* 2014ல் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்தது.

* 2019ல் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது; காங்., வெறும் 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்திருந்தது.

* 2024ல் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என மொத்தம் 20 மாநிலங்களிலும், காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என மொத்தம் 10 மாநிலங்களிலேயே ஆட்சி செய்து வருகிறது.

Advertisement