ஹரியானா தேர்தலில் தோல்வி: காங்கிரசை விமர்சிக்கும் கூட்டணி கட்சி

5

மும்பை: '' கூட்டணி கட்சிகள் இல்லாமல் வெற்றி பெறுவோம் என நினைத்ததால் தான் காங்கிரஸ் தோல்வி அடைந்தது, '' என மஹாராஷ்டிராவை சேர்ந்த கூட்டணி கட்சியான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.


ஹரியானா சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் இருந்த காங்கிரஸ் தோல்வியை சந்தித்து உள்ளது. இதனை அக்கட்சியால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை. ஓட்டு இயந்திரங்கள் மீது புகார் கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தை சந்திக்க போவதாகவும் கூறியுள்ளது. இது ஒரு புறம் இருக்க கூட்டணி கட்சிகள் தற்போது காங்கிரசை விமர்சிக்க துவங்கி உள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான ' இண்டியா ' கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியதாவது: ஹரியானாவில் தனித்து வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் நினைத்ததால் தான், அங்கு ' இண்டியா' கூட்டணி வெற்றி பெற முடியவில்லை. அக்கட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதை விரும்பவில்லை.

காங்கிரஸ் வெற்றி பெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் பூபிந்தர் ஹூடா நினைத்தார். சமாஜ்வாதி, ஆம் ஆத்மி மற்றும் சிறிய கட்சிகளுக்கு காங்கிரஸ் தொகுதிகளை ஒதுக்கி இருந்தால், முடிவுகள் வேறு மாதிரி இருந்து இருக்கும். தேர்தலை பா.ஜ., எதிர்கொண்ட விதம் சிறப்பானது. தோல்வியடைந்த களத்தில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வெற்றி பெறும் என அனைவரும் நினைத்த நிலையில் அக்கட்சி தோல்வியடைந்துள்ளது. முறையான அமைப்பு, நிர்வாகம் இருப்பதால் பா.ஜ., வெற்றி பெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement