போலீஸ் அக்கிரமம் ஆட்சிக்கு நல்லதல்ல; அமைச்சர் மீதும் சி.ஐ.டி.யு., குற்றச்சாட்டு

28

காஞ்சிபுரம்: ''தொழிலாளர்களுக்கு எதிராக போலீசார் அக்கிரமமாக நடந்து கொள்வது ஆட்சிக்கும், போலீஸ் அமைச்சருக்கும் நல்லது அல்ல,'' என சி.ஐ.டி.யு., சங்கத் தலைவர் செளந்தராஜன் கூறியுள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ளது சாம்சங் தொழிற்சாலை. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சம்பள உயர்வு, 8 மணி நேரம் வேலை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஒரு பிரிவினருக்கு உடன்பாடு ஏற்பட்டது. இதனை ஏற்காத சி.ஐ.டி.யு., சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஏதுவாக போராட்ட இடத்தில் இருந்த பந்தல் போலீசார் மூலம் அகற்றப்பட்டது. முக்கிய நிர்வாகிகள் இரவு கைது செய்யப்பட்டனர். இன்று தொழிலாளர்களில் ஒரு பிரவினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


இது தொடர்பாக சி.ஐ.டி.யு., சங்கத் தலைவர் செளந்தராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: அக்கிரமமாக போலீசார் நடந்து கொள்வது ஆட்சிக்கு நல்லதல்ல. போலீஸ் அமைச்சருக்கு நல்லதல்ல. முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை தொழிலாளிகளை , சிறுபான்மை தொழிலாளிகள் பக்கம் சாய்ப்பதற்காக அவர்களை மிரட்டுவதிலும் அச்சுறுத்துவதிலும் போலீஸ் துறை ஈடுபடுகிறது. போலீசை பயன்படுத்துகின்றனர்.


தமிழக அரசு சுணக்கம் காட்டுவது தான் பிரச்னை. இதனால் வேலை நிறுத்தம் நடக்கிறது. இதற்காக தான் 31 நாட்களாக வேலை நிறுத்தம் நடத்துவதன் மூலம், தமிழகம் முழுவதும், இந்தியா முழுவதும் எதிர்ப்பை காட்டுகிறோம். கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுவது தவறு. அமைச்சர் எங்களது கோரிக்கைகளை என்னவென புரிந்து கொள்ளவில்லை. புரியவில்லையா அல்லது புரியாதது மாதிரி நடிக்கிறாரா என தெரியவில்லை.


ரெஜிஸ்ட்ரேஷன் என்பது எங்களது உடனடி கோரிக்கை அல்ல. ரெஜிஸ்ட்ரேஷன் செய்தால் நாங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவோம் என நாங்கள் கூறவில்லை. ரெஜிஸ்ட்ரேஷன் என்பது தானாக கிடைக்கும். இன்று கிடைக்கும். இல்லையென்றால், நாளை அல்லது அடுத்த மாதம் கிடைக்கும். அதற்கு இவரின் எந்த தயவும் தேவையில்லை.


இவர் செய்ய வேண்டியதை கடந்து சென்றதால் தான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம்.
அமைச்சர் சொல்வது முற்றிலும் தவறு. அவர் செய்வது மழுப்பல். மக்களை திசை திருப்புவது. எங்கள் கோரிக்கை அதுவல்ல. எங்கள் கோரிக்கை சங்கத்தை முதலில் ஏற்க வேண்டும். அங்கீகரிக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை அவன் பேசுவான் அப்படி என்பதை ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும். இதனை செய்யவிட்டால் எதற்கு அரசு? எதற்கு ஆட்சி? போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை. இவர்கள் யாருக்கு எதிராக நிற்க வேண்டும்.


ரோட்டில் வேட்டையாடி உள்ளீர்கள். நேற்று இரவு முழுவதும் வீடு வீடாக சென்று தொழிலாளிகளை வேட்டையாடி உள்ளீர்கள். அனைத்து குடும்பங்களையும் அச்சுறுத்தி உள்ளீர்கள். பீதியை உண்டாக்கி உள்ளீர்கள். பெண்கள் முழுவதும் நடுங்கி கொண்டு உள்ளனர். இது தான் அரசு செய்ய வேண்டிய காரியமா? எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது போலீசின் அத்துமீறல். முதல்வர் தலையிட்டு சரி செய்ய வேண்டும். இல்லை என்றால், இந்த அத்துமீறல்களுக்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement