சாம்சங் தொழிலாளர் பிரச்னை: அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்த கூட்டணி கட்சிகள்!

17

சென்னை: காஞ்சிபுரத்தில் சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களுக்கு தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறினர்.

சாதாரண கோரிக்கை



மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
சாம்சங் தொழிலாளர் பிரச்னையில் முதல்வரை சந்திக்க உள்ளோம். சங்கத்தை பதிவு செய்யாத காரணத்தினால் தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். முறைப்படி பதிவு செய்து கொடுத்தால், வழக்கை வாபஸ் பெறுவார்கள். சங்கம் வைப்பது சாதாரணமான கோரிக்கை. அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை கோரிக்கை. அதற்கு மறுப்பு தெரிவிப்பது ஏன்? அதனை நிறைவேற்றி கொடுங்கள். தொழிற்சங்க தலைவர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வு காணுங்கள் என்பதுதான் எங்களது கோரிக்கை.

தமிழகம் முழுதும், காவல்துறைக்கு முதல்வர் தான் பொறுப்பு. போலீஸ் ஸ்டேசனில் ஒரு காவலர் அத்துமீறினார் என்பதற்காக அதற்கு எப்படி முதல்வர் பொறுப்பாக இருக்க முடியும். காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவான துறையாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது.
பந்தலை பிரிப்பதற்கும், 400 பேரை கைது செய்ய வேண்டியதற்கும் அவசியம் என்ன ?அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஒட்டு மொத்த காவல்துறையை குறை சொல்லவில்லை. காஞ்சிபுரம் காவல்துறையை மட்டும் சொல்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

அரசுக்கு உரிமை



விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது: தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது வருத்தம் அளிக்கிறது. இதனை திரும்ப பெறுவதுடன் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். இப்பிரச்னையில் முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும். அவர் தலையிட்டால் தான் தீர்வு கிடைக்கும்.
கூட்டணி கட்சி தலைவர்கள் என்ற முறையில் இரண்டொரு நாளில் முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். நீதிமன்ற வழக்கை சாக்கு போக்காக சொல்லாமல், அரசு நேரடியாக முடிவு எடுக்க முடியும். அப்படி எடுத்தால் வழக்கு செயலிழந்து போகும். அதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது.
பதிவாளர் என்ற முறையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையருக்கு சங்கத்தை பதிவு செய்யும் அதிகாரம் உள்ளது. அது சட்டப்பூர்வமானது. இதில் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் என்ன தயக்கம். இது தான் பிரச்னையின் புள்ளியாகவும், மூலமாகவும் உள்ளது.
இந்த தயக்கத்தை தவிர்த்து சங்கத்தை பதிவு செய்வதற்கு முன் வர வேண்டும். 17 ஆண்டுகளாக தொழிற்சங்கத்தை அமைக்காதது அடக்குமுறை. சாம்சங் நிறுவனத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக உள்ளோம். பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டுக்கு எதிராக இல்லை. தொழிலாளர்களை சுரண்டுவதை எதிர்க்கிறோம். சங்கம் வைக்க ஜனநாயக உரிமை உள்ளது என்றார்.

நிறுவனத்தின் தவறு



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் : சாம்சங் தொழிலாளர் பிரச்னைக்கு சுமூகமாக தீ்ர்வு காண விரும்புகிறோம். நிறுவனத்தை அழிக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. தமிழகத்தில் அனைத்து நிறுவனங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தொழிலாளர்கள் சங்கம் வைக்க சட்ட ரீதியில் உரிமை உண்டு. 16 ஆண்டுகளாக சங்கம் வைக்கும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபடவில்லை. நிறுவனம் தொழிலாளர்களை நல்ல முறையில் அணுகியிருந்தால் சங்கம் வைக்க முன்வந்திருக்க மாட்டார்கள். தவறு நிறுவனத்திடம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement