காங்கிரஸ் தொடர் தோல்வி: கழற்றி விட துணிந்தது சமாஜ்வாதி!

11

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் சரியாக செயல்படவில்லை எனக்கூறி, காங்கிரசை அதன் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி புறக்கணிக்க துவங்கி உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ' இண்டியா ' கூட்டணியில் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஹரியானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட இக்கட்சிகள் விரும்பின. ஆனால், அங்கு வெற்றி பெறுவது உறுதி என்ற நம்பிக்கையில் இருந்த காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சிகள் கேட்ட தொகுதியை ஒதுக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து, இரண்டு கட்சிகளும் தனித்து களமிறங்கின. இதனால், பல இடங்களில் காங்கிரஸ் சொற்ப ஓட்டுகளில் தோல்வியை தழுவி ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது.



தோல்வியில் இருந்து மீள்வதற்குள் கூட்டணி கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக, காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாராகிவிட்டன. முதலில் சிவசேனாவின் சஞ்சய் ராவத் காங்கிரசை விமர்சித்தார். அடுத்ததாக சமாஜ்வாதியும் காங்கிரசை புறக்கணிக்க துவங்கிவிட்டது.


உ.பி.,யில் விரைவில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் 5 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை அங்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் சமாஜ்வாதியிடம் காங்கிரஸ் வெளிப்படுத்தியது. ஆனால், அதற்கு பதில் சொல்வதற்கு மாறாக 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது.


இதற்கு காரணம் தெரிவிக்கும் சமாஜ்வாதி, லோக்சபா தேர்தலில் நாங்கள் 62 தொகுதிகளில் போட்டியிட்டு 37 ல் வெற்றி பெற்றோம். ஆனால், காங்கிரஸ் 17 ல் போட்டியிட்டு 6ல் மட்டுமே வென்றது. இதனால் 3 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரசின் அவினாஸ் பாண்டே கூறுகையில், இண்டியா கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடப்பதற்கான எந்த தகவலும் இல்லை. வேட்பாளர் அறிவிப்பு குறித்து எந்த தகவலும் எங்களுக்கு கூறவில்லை. நாங்கள், மாநிலத்தில் அதிக நம்பிக்கையில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.



லோக்சபா தேர்தலுக்கு முன்னரும் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே பிரச்னை எழுந்தது. ராகுல், பிரியங்கா தலையீட்டிற்கு பிறகே அதனை சரி செய்தனர். ம.பி., மாநிலத்திலும் நடந்த சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதிக்கு தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் மறுத்தது. சத்தீஸ்கர் , ராஜஸ்தானிலும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்காமல் காங்கிரஸ் செயல்பட்டது. இதனால், அந்த மாநிலங்களில் தோல்வியைதான் எதிர்கொண்டது. தொகுதி ஒதுக்கீட்டில் பிடிவாதம் பிடிக்கும் காங்கிரசை, இண்டியா கூட்டணியில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா கடுமையாக சாடியிருந்தார்.


உ.பி., இடைத்தேர்தலில் சமாஜ்வாதியிடம் கூடுதல் தொகுதி கேட்டு காங்கிரஸ் காத்து கொண்டு இருக்கும் நிலையில், மறுபுறம் மாநிலத்தை ஆளும் பா.ஜ., வெற்றி பெறும் முனைப்பில் பணிகளை துவக்கிவிட்டது.

Advertisement