ஆயுத பூஜையில் பூசணிக்காய்களை சாலையில் உடைக்க வேண்டாம் ஆணையர்கள் அறிவுறுத்தல்

புதுச்சேரி: ஆயுத பூஜையை முன்னிட்டு பூசணிக்காய்களை சாலையில் உடைப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பூஜைகள் செய்யப்பட்டு, திருஷ்டிப் பூசணிக்காய் சாலையில் உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். பூசணிக்காயை சாலையில் உடைப்பதால், வாகன ஓட்டிகள் செல்லும் போது, வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது.

எனவே, ஆயுத பூஜை கொண்டாடும் பொதுமக்கள் சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், பிளாஸ்டிக்கால் ஆன அலங்காரப் பொருட்கள் மற்றும் கேரிபைகள் விற்பனை, உபயோகத்தை தவிர்க்குமாறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement