ஜோ ரூட், ஹாரி புரூக் சதம்: இங்கிலாந்து அணி பதிலடி

முல்தான்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் ஜோ ரூட், ஹாரி புரூக் சதம் கடந்தனர்.

பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, மூன்று போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் முல்தானில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 556 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 96/1 ரன் எடுத்திருந்தது. கிராலே (64), ரூட் (32) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்த போது ஷாகீன் அப்ரிதி 'வேகத்தில்' கிராலே (78) அவுட்டானார். அடுத்து வந்த பென் டக்கெட் (84) கைகொடுத்தார். பின் இணைந்த ஜோ ரூட், ஹாரி புரூக் ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. பொறுப்பாக ஆடிய ஜோ ரூட், தனது 35வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அப்ரார் அகமது பந்தை சிக்சருக்கு அனுப்பிய புரூக், சவுத் ஷகீல் பந்தில் 2 ரன் எடுத்து சதத்தை எட்டினார். இவர்களை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினர். நசீம் ஷா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜோ ரூட், 150 ரன்னை கடந்தார்.


ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 492/3 ரன் எடுத்திருந்தது. ரூட் (176), புரூக் (141) அவுட்டாகாமல் இருந்தனர்.


குக்கை முந்தினார்
பேட்டிங்கில் அசத்திய ஜோ ரூட், டெஸ்ட் அரங்கில் அதிக ரன் குவித்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் அலெஸ்டர் குக்கை (12472 ரன்) முந்தி முதலிடம் பிடித்தார். இதுவரை 147 டெஸ்டில் விளையாடிய ரூட், 12578 ரன் எடுத்துள்ளார். அதிக ரன் குவித்த சர்வதேச வீரர்கள் வரிசையில் குக்கை முந்தி 5வது இடம் பிடித்தார் ரூட்.

35 சதம்
இங்கிலாந்தின் ஜோ ரூட், டெஸ்ட் அரங்கில் அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீசின் லாரா, பாகிஸ்தானின் யூனிஸ் கான், இலங்கையின் மகிளா ஜெயவர்தனேவை (தலா 34 சதம்) முந்தி 6வது இடம் பிடித்தார். ரூட், இதுவரை 35 சதம் அடித்துள்ளார்.

முதல் ஐந்து இடங்களில் இந்தியாவின் சச்சின் (51 சதம்), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (45), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (41), இலங்கையின் சங்ககரா (38), இந்தியாவின் ராகுல் டிராவிட் (36) உள்ளனர்.

5000 ரன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 5000 ரன் குவித்த முதல் வீரர் ஆனார் ஜோ ரூட். இதுவரை 59 டெஸ்டில், 17 சதம் உட்பட 5149 ரன் எடுத்துள்ளார். அடுத்த இரு இடத்தில் ஆஸ்திரேலியாவின் லபுசேன் (3904 ரன்), ஸ்டீவ் ஸ்மித் (3486) உள்ளனர்.

Advertisement