திறந்தவெளியில் கட்டட கழிவுகள் வடிகாலில் அடைப்பு என குற்றச்சாட்டு

அடையாறு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, நலச்சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில், வேளச்சேரியில் நேற்று நடந்தது.

வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ., ஹாசன் மவுலானா, துணை மேயர் மகேஷ்குமார், மண்டல குழு தலைவர் துரைராஜ், கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார், ஆலந்துார் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை நடந்துள்ள பணிகள் குறித்து, அமைச்சர் சுப்பிரமணியன், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில், 169, 171, 172, 180 ஆகிய வார்டுகளில் இருந்து, நலச்சங்கத்தினர் பங்கேற்கவில்லை. மீதமுள்ள, ஒன்பது வார்டுகளைச் சேர்ந்ந நலச்சங்கத்தினர் பேசியதாவது:

கிண்டியில் நெடுஞ்சாலைத் துறை அமைத்த வடிகால்களில் மூடிகள் உடைந்து, ஆபத்தாக உள்ளது. அடையாறு, சாஸ்திரி நகரில், சாலை, கழிவுநீர் தீராத பிரச்னையாக உள்ளது. மின் கேபிள்கள் வெளியே கிடப்பதால் மழைக்காலத்தில் மின் விபத்து நிச்சயம் ஏற்படும்.

வேளச்சேரி ஏரி உபரிநீர், பகிங்ஹாம் கால்வாயில் செல்லும் வகையில், 4 கி.மீ., துாரத்தில் அமைத்த மூடு கால்வாயில், துார்வார எந்த வசதியும் இல்லாததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், எந்த பயனும் இல்லை.

கட்டடக் கழிவுகளை, திறந்தவெளியில் கொட்டுவதால் வடிகால், கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதற்கு பதிலளித்து, அந்தந்த துறை அதிகாரிகள் கூறுகையில், 'மழைக்காலத்திற்கு முன் அவசரமாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் உடனே எடுக்கப்படும்.

கழிவுநீர், சாலை தொடர்பான நிரந்தர தீர்வுக்கு, மழைக்காலம் முடிந்த பின் தீர்வு காணப்படும்' என்றனர்.

தொடர்ந்து, அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:

இந்த ஆண்டு பருவமழை, கடந்த ஆண்டைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு ஏற்ப, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி இதர துறைகளுடன் இணைந்து, பல்வேறு முன்னேற்பாடுகள் செய்து வருகின்றன.

இதனால், பாதிப்பு இருக்கும் என்ற அச்சம் தேவை இல்லை. அதே வேளையில், மெத்தனமாகவும் இருக்க வேண்டாம்.

இணைப்பு இல்லாத வடிகால் பணிகளை, உடனே முடிக்க வலியுறுத்தி உள்ளோம். நீர்த்தேக்கம், நீர்வழி தடங்களில் அடைப்பு ஏற்படாமல் பார்க்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. நீர்நிலைகளை திறந்தவெளி குப்பைத்தொட்டியாக நினைக்காதீர்கள்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Advertisement