162 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழஙகல்

காஞ்சிபுரம்:சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், ஒவ்வொரு மாதமும், காஞ்சிபுரம் கலெக்டர் தலைமையில், மக்கள் தொடர்பு முகாம், ஏதாவது ஒரு ஊராட்சியில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், அக்டோபர் மாதத்திற்கான மக்கள் தொடர்பு முகாம், காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்ஒட்டிவாக்கம் கிராமத்தில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.

முகாமில் இலவச வீட்டுமனை பட்டா , பட்டா மாற்றம், ரேஷன் அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 45 மனுக்கள் பெறப்பட்டன. பின், மனுக்கள் தீர்வு காணப்பட்டு, 162 பயனாளிகளுக்கு, 1.84 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.

இதை தொடர்ந்து மேல்ஒட்டிவாக்கம் ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, பொருட்களின் தரம் குறித்து பார்வையிட்டு, தேவையான அளவு இருப்பு உள்ளதா என்று கேட்டறிந்தார்.

அதே பகுதியில் கட்டப்பட்டு வரும் கபடி உள்விளையாட்டு அரங்கையும் பார்வையிட்டு, அங்குள்ள அங்கன்வாடி மையத்திலுள்ள குழந்தைகளின் கற்றல் திறனையும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில், தி.மு.க.,- - எம்.பி., செல்வம், தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஒன்றிய குழு சேர்மன் மலர்க்கொடி, சப்- - கலெக்டர் ஆசிப்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மகளிர் உரிமை தொகை



கேள்வியால் சலசலப்புமேல் ஒட்டிவாக்கம் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன் பேசியபோது, ''மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் வரவில்லை,'' என, மக்களிடையே கேள்வி எழுப்பினார். மகளிர் உரிமைத்தொகை பலருக்கும் வரவில்லை என கை துாக்கியதால், அங்கிருந்த தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்தனர்.

இவற்றை சமாளிக்கும் வகையில், அடுத்து பேசிய கலெக்டர் கலைச்செல்வி, ''இக்கிராமத்தில் உள்ள 650 குடும்பத்தில், 550 குடும்பத்திற்கு மகளிர் உரிமைத்தொகை உட்பட அரசின் நேரடி உதவித்தொகை செல்கிறது. மீதமுள்ள 100 குடும்பத்தினர் தகுதியற்றவராக இருப்பர்; மற்றபடி அனைத்து தகுதியானவருக்கும் அரசின் திட்டங்கள் செல்கின்றன,'' என்றார்.

Advertisement