மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சிக்கியது என்ன

சேலம்:சேலம், கந்தம்பட்டியில் உள்ள, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக, மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவம், 58. இவர், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ரவிக்குமாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, முரங்கம், வேதபிரியன் காட்டில் உள்ள சதாசிவம் வீட்டில் நேற்று முன்தினம் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள், டைரியை கைப்பற்றினர்.

போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சதாசிவம், 7000 சதுர அடியில் வீடு கட்டியுள்ளார். அவர், குடும்ப உறுப்பினர்கள் என, 21 வங்கி கணக்கு வைத்துள்ளார். நான்கு கார்கள், 5 இரு சக்கர வாகனங்கள், டிராக்டர் அவரிடம் உள்ளன. வீட்டில், 2.68 லட்சம் ரூபாய், 68 சவரன் நகைகள் இருந்தன. மேலும், அவரின் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

லஞ்சம் பெறும் கணக்கு விபரம், துண்டு சீட்டுகளில் இருந்தன. அதில் மாதந்தோறும், 15 லட்சம் ரூபாய் வரை மாமூல் வசூலிக்க, 10 பேர் தரகர்களாக செயல்பட்டது தெரிந்தது. வங்கியில், 3 லாக்கர்கள் உள்ளன. அதன் சாவியை எடுத்துள்ளோம். அதில் என்ன உள்ளது என கண்டறிய நீதிமன்றத்தில் மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement