கோவில் கடைகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்: 13 பேர் கைது


கோவில் கடைகளுக்கு சீல் வைக்க
எதிர்ப்பு தெரிவித்து மறியல்: 13 பேர் கைது
கரூர், அக். 10-
கரூர் அருகே, பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரில் பட்டா உள்ள கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. அதை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட, 13 பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெண்ணைமலை பால சுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரில், பட்டா உள்ள காலி இடங்கள், வீடுகள், கடைகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி ஆய்வு செய்து, சீல் வைக்கும் பணிகளில் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை வெண்ணைமலை பஸ் ஸ்டாப்பில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரில் பட்டா உள்ள, ஐந்து கடைகளுக்கு திருப்பூர் ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஹரிணி, உதவி ஆணையர் ரமணி காந்தன், கோவில் செயல் அலுவலர் சுகுணா உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதை கண்டித்து, முன்னாள் வி.ஏ.ஓ., காமராஜ் தலைமையில், பொதுமக்கள் வெண்ணைமலை பஸ் ஸ்டாப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஒரு பெண் உள்பட, 13 பேரை வெங்கமேடு போலீசார் கைது செய்தனர்.

Advertisement