ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்து தருவதாக கூறி ரூ.2.78 லட்சம் அபேஸ்: வாலிபர் கைது


ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்து தருவதாக கூறி
ரூ.2.78 லட்சம் அபேஸ்: வாலிபர் கைது
கரூர், அக். 10-
கரூரில் ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்து தருவதாக கூறி, இரண்டு பேரிடம் பணத்தை அபேஸ் செய்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், கடம்பங்குறிச்சி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் என்பவரது மனைவி முத்தாள், 65; இவர் கடந்த ஜூலை, 27ல் கரூரில் உள்ள
எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க வந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் பணம் எடுத்து தருவதாக கூறி, முத்தாளின் ஏ.டி.எம்., கார்டு மற்றும் ரகசிய எண்ணை கேட்டுள்ளார். பிறகு, ஏ.டி.எம்., மெஷினில் பணம் இல்லை என கூறி, போலியான ஏ.டி.எம்., கார்டை மர்ம நபர் கொடுத்துள்ளார்.பிறகு, முத்தாளின் ஒரிஜினல் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, இரண்டு லட்ச ரூபாயை மர்ம நபர் எடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த முத்தாள், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.அதேபோல், கரூர் தளவாப்பாளையத்தை சேர்ந்த சஞ்சீவி, 63, என்பவிடம் கரூரில் உள்ள, எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்து தருவதாக, கடந்த ஆக., 15ல் கூறிய நபரை நம்பி, 78 ஆயிரம் ரூபாயை இழந்தார். இதுகுறித்து சஞ்சீவி, முத்தாள் கொடுத்த புகாரை, கரூர் டவுன் போலீசார் விசாரித்து வந்தனர்.அப்போது முத்தாள், சஞ்சீவ் ஆகியோரிடம் ஒரிஜினல் ஏ.டி.எம்., கார்டு, ரகசிய எண்ணை பெற்றுக்கொண்டு, 2.78 லட்சம் ரூபாயை அபேஸ் செய்த நபர் கரூர் மாவட்டம், குளித்தலை நங்கவரம் பகுதியை சேர்ந்த சரவண குமார், 30, என தெரிய வந்தது.இதையடுத்து, நேற்று முன்தினம் சரவணகுமாரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement