குறுமைய விளையாட்டு போட்டி; அரசு பள்ளி மாணவியர் அபாரம்

பல்லடம் : குறுமைய விளையாட்டுப் போட்டிகளில், பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவியர் பலர் வெற்றி பெற்றனர். ஓட்டப் பந்தயத்தில், 12ம் வகுப்பு மாணவி காவியா, சந்தியா, கோரி பீபி; 11ம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி ஆகியோர் முதலிடம் பெற்றனர். 19 வயதுக்கு உட்பட்ட பீச் வாலிபால் போட்டி மற்றும் கேரம் ஒற்றையர் போட்டியில், 11ம் வகுப்பு மாணவி தனலட்சுமி வெற்றி பெற்றார். மேலும், ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில், இப்பள்ளி மாணவியர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றனர்.

திருப்பூரில் நடந்த முதல்வர் கோப்பை கபடி போட்டியில், பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் இரண்டாம் இடம் பெற்றனர். கபடி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட, 11ம் வகுப்பு மாணவி பவித்ரா, 12ம் வகுப்பு மாணவி வர்ணிகா ஆகியோர் மாநிலப் போட்டியில் பங்கேற்பதற்கான பயிற்சிக்கு தேர்வாகியுள்ளனர். ஹயாசிகா கராத்தே இந்திய அமைப்பு சார்பில், கோவையில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில், மாணவி நித்யதர்ஷினி தங்கப்பதக்கமும், மிருதுளா வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மேலும் 10வது கென் ஐகான் தேசிய கராத்தே போட்டியில், நித்யதர்ஷினி இரண்டு தங்கம், மிருதுளா ஒரு தங்கம் மற்றும் பவித்ரா ஒரு வெள்ளி பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவியருக்கு, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, உடற்கல்வி ஆசிரியர்கள் மருதை, சித்ரா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement