மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழை; 269 மி.மீ .,பதிவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் சீரான இடைவெளியில் கொட்டித்தீர்த்த மழையால் ஒரே நாளில் 269 மி.மீ., பதிவாகி உள்ளது.

மழைகாலம் தொடங்கிய பின்னும் திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் இருந்த வண்ணமே இருந்தது. கொடைக்கானல், பழநி, நத்தம் என மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தாலும் திண்டுக்கலில் வெயிலின் தாக்கம் மட்டுமே இருந்தது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அக். 8 மதியம் 1 :00 மணிக்கு மேல் விட்டு விட்டு சீரான இடைவெளியில் மழை பெய்ய மதியம் 2:30 மணி முதல் 4:00 மணி வரை இடைவிடாது மழை பெய்தது. மழை இரவு வரை நீடித்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடனே இருந்தது. மதியத்திற்கு மேல் பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மழையில் வீடு திரும்ப அவதிப்பட்டனர். அலுவலகங்கள் முடிந்தும் பலர் வீடு திரும்ப முடியாமல் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.

பாலகிருஷ்ணாபுரம் சாஸ்திரி நகர் 2வது தெருவில் மழைநீர் தேங்கியது. கழிவுநீர் ஓடை சரிவர கட்டாததால் இந்த நீர் தேங்குகிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் மழை நீருடன் கழிவுநீர் தேங்கி உள்ளதால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புக பலரும் பாதித்தனர். ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை நீர்தேங்க வீடுகளில் மழை நீர் புகுந்தது.

வேடசந்துார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடர் மழை, காற்று வீசியதால் ரங்கநாதபுரம் ஓடைப்பகுதியில் நடப்பட்டிருந்த தனியார் சோலார் மின் மின்கம்பங்கள் சாய்ந்தன. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழையால் 269.70மி.மீ., பதிவாகி உள்ளது.நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை கணக்கின்படி அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 51 மீ.மீ., மழை பதிவாகி உள்ளது.

Advertisement