பாக்., ராணுவத்துடன் தொடர்பு சென்னை நபர் சிக்கினார்

சென்னை: தடை செய்யப்பட்ட, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததுடன், பாகிஸ்தான் ராணுவத்திற்கு உளவு தகவல் சொன்னதாக, சென்னையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.


பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத்தஹ்ரீர் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்து சதியில் ஈடுபடுபவர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர்.


சென்னை ராயப்பேட்டையில் கல்வி நிலையம் என ரகசிய கூட்டம் நடத்தி பயங்கரவாத பயிற்சி அளித்த சென்னை அண்ணா பல்கலை முன்னாள் கவுரவ பேராசிரியர் டாக்டர் ஹமீது உசேன் உட்பட ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஏழாவது நபராக சென்னையைச் சேர்ந்த பைசல் ரஹ்மான் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:பைசல் ரஹ்மான், தமிழகம், புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சியும் அளித்து வந்தார். இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத கருத்துக்களையும் பரப்பி வந்தார்.

அவர் பாக்., ராணுவத்துடன் தொடர்பில் இருந்ததுடன் உளவு தகவல்களையும் தெரிவித்துள்ளார். காஷ்மீரை விடுவித்து, அங்கு இஸ்லாமிய ஆட்சி அமைக்க பாக்., ராணுவத்தின் உதவியையும் கோரியுள்ளார்.

தேர்தலை சீர்குலைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். சமூக வலைதளம், பிற தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி, ஆட்களை திரட்டி உள்ளார். மாநிலம் முழுதும் பிரிவினைவாதம் குறித்து வகுப்பும் எடுத்துள்ளார். அவரின் கூட்டாளிகளையும் தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement