மழை முன்னெச்சரிக்கை ஆறு, ஏரிகள் கண்காணிப்பு

சென்னை : வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 24 மணி நேரமும் நீராதாரங்களை கண்காணிக்க, நீர்வளத் துறை நடவடிக்கைகளை துவங்கியுள்ளது.


நடப்பாண்டு, வடகிழக்கு பருவ மழை, 112 சதவீதம் அளவிற்கு மேல் பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பருவ மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக, துணை முதல்வர் உதயநிதி, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், முதன்மை தலைமை பொறியாளர் மன்மதன் உள்ளிட்டோர், நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.


பருவ மழை துவங்கியது முதல் நீராதாரங்கள் மற்றும் நீர்வழித்தடங்களை, 24 மணி நேரமும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, சென்னை சேப்பாக்கம் நீர்வளத்துறை தலைமை அலுவலகத்தில், தலைமை கட்டுப்பாட்டு மையமும், சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில், மண்டல கட்டுப்பாட்டு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.


இவற்றில், 24 மணி நேரமும் இரண்டு, 'ஷிப்ட்' அடிப்படையில், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். வடகிழக்கு பருவ மழை துவங்கியது முதல், இந்த அவசர கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படத் துவங்கும் என, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கட்டுப்பாட்டு மையங்களில் பெறப்படும் தகவல்கள் உடனுக்குடன் முதல்வர் அலுவலகத்திற்கும், மாநில வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு மையத்திற்கும் அனுப்பும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

Advertisement