'இரட்டை வேடம் போடாமல் தீர்வு காண வேண்டும்' சாம்சங் பிரச்னையில் அரசுக்கு ஊழியர்கள் சங்கம் கண்டனம்

மதுரை : ''சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னையில், தமிழக அரசு இரட்டை வேடம் போடாமல் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்'' என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இந்த அமைப்பின் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியிருப்பதாவது:

ஒரு மாதத்திற்கும் மேலாக 'சாம்சங்' நிறுவன ஊழியர்கள் சங்கம் அமைக்கும் உரிமை, ஊதிய உயர்வுக்காக போராடுகின்றனர். முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்னையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண கேட்டுக் கொண்டார்.

அக்.,7 ல் நடந்த பேச்சு வார்த்தையில் சாம்சங் ஊழியர்களின் நிலைப்பாட்டை, அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அன்பரசன், கணேசன் ஆகியோரிடம் தொழிலாளர்கள் குழு தெரிவித்தது. இதனை முதல்வரிடம் தெரிவித்து முடிவை அறிவிப்பதாகச் சென்ற அமைச்சர்கள், போராட்டத்தை திசை திருப்பும் வகையில் செயல்படுகின்றனர். சில அப்பாவி தொழிலாளர்களை வைத்துக் கொண்டு, அமைச்சர்களும், சாம்சங் நிறுவனமும் ஏற்படுத்தி வைத்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணத்தை உடன்பாடு ஏற்பட்டதாக அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

தொழிற்சங்க போராட்டம் குறித்தும், தலைவர்கள் குறித்தும் அவதுாறு செய்திகளை சாம்சங் நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கி வருகிறது. இவை எல்லாவற்றுக்கும் பின்னால் நிறுவனமும், அமைச்சர்களும் உடந்தையாக செயல்படுவது, நள்ளிரவு கைது என்பதை துவக்கியுள்ள, நிறுவனத்தின் 4 நிர்வாகிகளை மட்டும் கைது செய்திருப்பது, பந்தல் பிரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது போன்றவை ஏற்புடையதல்ல. இந்த நடவடிக்கையை, நியாயமான போராட்டத்தை திசை திருப்பும் செயலாகவே கருதி, வன்மையாக கண்டிக்கிறோம்.

முன்மாதிரி முதலாளியாக இருந்து தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய அரசு, கார்ப்பரேட் நிறுவன கைப்பாவையாக மாறி இருப்பது வேதனை. இது அத்தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகம். இப்பிரச்னையில் அரசு இரட்டை வேடம் போடாமல், சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement