ஹெல்மெட் போடாததால் அபராதம் அதிர்ச்சி அடைந்த கார் உரிமையாளர்

1

புதுக்கோட்டை: ஆலங்குடி வழியாக கொத்தமங்கலம் பகுதிக்கு காரில் சென்றவருக்கு, 'ஹெல்மெட் போடவில்லை' என இ-சலானில் 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதால், கார் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ், 25. கடந்த, 2ம் தேதி ஆலங்குடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார், டிரைவிங் வைசன்ஸ் இல்லை, காரில் சென்ற போது ஹெல்மெட் அணியவில்லை, மொபைல் போன் பேசியபடி கார் ஓட்டியதாக அபராதம் 4,000 ரூபாய் கட்ட வேண்டும் என அவரது செல்போனுக்கு தகவல் வந்துள்ளது.


இதைப் பார்த்து அதிர்ந்த மகேஸ், உடனடியாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை போலீசாரிடம் கேட்டதற்கு முறையான பதில் இல்லை.

இது குறித்து மகேஸ் கூறியதாவது:

என் காரை போக்குவரத்து துறை போலீசார் நிறுத்தி சோதனை செய்யவில்லை. 'வாகன சோதனையில் டிரைவிங் வைசன்ஸ் இல்லை, காரில் சென்ற போது, ஹெல்மெட் அணியவில்லை, மொபைல் போன் பேசியபடி கார் ஓட்டியதால் அபராதம் 4,000 ரூபாய் கட்ட வேண்டும்' என, இ-சலானிலிருந்து என் மொபைல் போனுக்கு தகவல் வந்துள்ளது. காரில் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்தது எனக்கு வினோதமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement