ஆட்டோமொபைல் துறையில் 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு!

புதுடில்லி: நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்திய ஆட்டோமொபைல் துறை 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளது.

இது குறித்து கிராண்ட் தோர்ன்டன் பாரத் நிறுவன அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய ஆட்டோமொபைல் துறை, அமோக வளர்ச்சி பெற்று வருகிறது. 2024ம் ஆண்டின் 3வது காலாண்டில் மட்டும் 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது.

இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல், தனியார் பங்குகள், ஐ.பி.ஓ, மற்றும் நிறுவன பங்களிப்பு உள்ளிட்ட 32 விதமான செயல்பாடுகள் மூலம் இந்த பெரும் முதலீடு திரட்டப்பட்டுள்ளது. இந்தாண்டின் 2வது காலண்டை காட்டிலும் 30 சதவீதம் முதலீடு அதிகம் கிடைத்துள்ளது.

தனியார் பங்களிப்பு மூலமும் 4551 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. இதுவும் கடந்த 2வது காலாண்டை காட்டிலும் தற்போது 30 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் மின்சார வாகனம் மற்றும் மொபைலிட்டி (எம்ஏஏஎஸ்) இணை துறைகளில் மேற்கொள்ளப்பட்ட 17 ஒப்பந்தங்கள் மூலம் 4349 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டது.

வெஸ்ட் பிரிட்ஜ் முதலீடு மூலம் 1679 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. கார்லைல் நிறுவனம், இந்திய ஆட்டோமொபைல் துறையில் 3358 கோடி ரூபாய் முதலீட்டை அளித்துள்ளது.

மேலும் ரேபிடோ, யூனிகார்ன்ஸ் மற்றும் ஓலா எலக்ட்ரிக்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஆட்டோமொபைல்துறையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement