குழந்தை திருமணம் தடுக்க 11 லட்சம் பேருக்கு கவுன்சிலிங்; தேசிய ஆணையம் தகவல்!

புதுடில்லி: கடந்த 2023-24ம் ஆண்டில், குழந்தை திருமணம் தடுப்பதற்காக, 11.4 லட்சம் பேருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டதாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து என்.சி.பி.சி.ஆர் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த 2023-24ம் ஆண்டில் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் 11 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு தேவையான குடும்ப ஆலோசனை, பள்ளி மறு ஒருங்கிணைப்பு முயற்சிகள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குழந்தைத் திருமணத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் விழிப்புணர்வில், உ.பி., தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
இந்த மாநிலங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு, பிரசாரம் 1.2 கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது. பாதிக்கப்படும் வாய்ப்புள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டுள்ள உத்தரப் பிரதேசம், இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதில் வலுவான அடித்தளம் அமைத்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் மத்தியப் பிரதேசம், ஒடிசா மாநிலங்கள் உள்ளன.

குழந்தை திருமணங்களைத் தடுக்க, என்.சி.பி.சி.ஆர்., அறிவுரைபடி, முன்னறிவிப்பின்றி, 30 நாட்கள் தொடர்ந்து பள்ளிக்கு வராத குழந்தைகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடைநிற்றல்களைக் கண்காணிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

கர்நாடகா மற்றும் அசாம் மாநிலங்களில், மதத் தலைவர்கள், திருமண விழாக்களில் ஈடுபடும் ஆர்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முக்கிய உள்ளூர் பிரமுகர்களுடன் 40,000 விழிப்புணர்வு கூட்டங்களை அலுவலர்கள் நடத்தி உள்ளனர்.

என்.சி.பி.சி.ஆர்., தலைவர் பிரியங்க் கனூங்கோ கூறுகையில், 'குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டத்துக்கு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் முன்னுரிமை அளித்து, மாவட்ட அளவிலான உத்திகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்,'' என்றார்.

Advertisement