புரூக் '317'... ரூட் '262': 823 ரன் குவித்தது இங்கிலாந்து

முல்தான்: ஹாரி புரூக் முச்சதம், ஜோ ரூட் இரட்டை சதம் விளாச இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 823 ரன் குவித்தது.

பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, மூன்று போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் முல்தானில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 556 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 492/3 ரன் எடுத்திருந்தது. ரூட் (176), புரூக் (141) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் பொறுப்பாக ஆடிய ஜோ ரூட், 305 பந்தில் இரட்டை சதம் எட்டினார். மறுமுனையில் அசத்திய ஹாரி புரூக், டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக இரட்டை சதத்தை பதிவு செய்தார். அபாரமாக ஆடிய ஜோ ரூட், நசீம் ஷா பந்தை பவுண்டரிக்கு விரட்டி 250 ரன்னை கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 454 ரன் சேர்த்த போது ஜோ ரூட் (262) அவுட்டானார்.
சைம் அயூப் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய புரூக், 310 பந்தில் முச்சதம் கடந்தார். ஜேமி ஸ்மித் (31) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய புரூக், 317 பந்தில் ஆட்டமிழந்தார். அட்கின்சன் (2) ஏமாற்றினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 823 ரன் குவித்து 'டிக்ளேர்' செய்தது. வோக்ஸ் (17), பிரைடர் கார்ஸ் (9) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா, சைம் அயூப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


பின் 2வது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணி, ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 152 ரன் எடுத்து 115 ரன் பின்தங்கி உள்ளது. சல்மான் ஆகா (41), ஆமீர் ஜமால் (27) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் அட்கின்சன், பிரைடர் கார்ஸ் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

அதிக ரன்
டெஸ்ட் அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த அணியானது இங்கிலாந்து (823/7 'டிக்ளேர்'). இதற்கு முன் 1958ல் கிங்ஸ்டன் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 790/3 ('டிக்ளேர்') ரன் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.


* இது, இங்கிலாந்து அணியின் 3வது அதிகபட்ச ஸ்கோர். ஏற்கனவே ஆஸ்திரேலியா (903/7, 'டிக்ளேர்', 1938, ஓவல்), வெஸ்ட் இண்டீஸ் (849/10, 1930, கிங்ஸ்டன்) அணிகளுக்கு எதிராக அதிக ரன் எடுத்திருந்தது.

சேவக்கிற்கு பின்...
இங்கிலாந்தின் ஹாரி புரூக் (310 பந்து), டெஸ்ட் அரங்கில் குறைந்த பந்தில் 300 ரன்னை எட்டிய வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் இந்தியாவின் சேவக் (278 பந்து, எதிர்: தென் ஆப்ரிக்கா, 2008, இடம்: சென்னை) உள்ளார்.

454 ரன்
இங்கிலாந்தின் ஜோ ரூட் - ஹாரி புரூக் ஜோடி (454 ரன்), டெஸ்ட் அரங்கில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த ஜோடி வரிசையில் 4வது இடம் பிடித்தது. முதலிடத்தில் இலங்கையின் ஜெயவர்தனா - சங்ககரா ஜோடி (624 ரன், எதிர்: தென் ஆப்ரிக்கா, 2006, இடம்: கொழும்பு) உள்ளது.

317 ரன்
டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் 5வது இடம் பிடித்தார் ஹாரி புரூக் (317). முதலிடத்தில் ஹட்டன் (364 ரன், எதிர்: ஆஸி., 1938, ஓவல்) உள்ளார்.


இரண்டாவது முறை
முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் பவுலர்கள் 6 பேர், தலா 100 அல்லது அதற்கு மேல் ரன் விட்டுக்கொடுத்தனர். டெஸ்ட் அரங்கில் இப்படி நடப்பது இரண்டாவது முறை. இதற்கு முன் 2004ல் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் ஜிம்பாப்வே பவுலர்கள் இப்படி ரன்களை வாரி வழங்கினர்.

Advertisement