அரசியலமைப்பை விட மத நம்பிக்கை உயர்ந்தது அல்ல: கேரளா ஐகோர்ட்

1

திருவனந்தபுரம், 'இந்திய அரசியலமைப்பை விட எந்த மத நம்பிக்கையும் உயர்ந்தது அல்ல' என கேரள உயர் நீதிமன்றம்தெரிவித்துள்ளது.

கேரளாவின் கோழிக்கோடில் மார்க்ஸ் சட்டக்கல்லுாரி இயங்கிவருகிறது. சமீபத்தில் இங்கு நடந்த நிகழ்ச்சியில், மாநில முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் பங்கேற்றார்.

வீடியோ



அப்போது அங்கிருந்த இஸ்லாமிய மாணவி ஒருவர், அவரை கைகுலுக்கி வரவேற்றார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த கோட்டக்கல்லைச் சேர்ந்த அப்துல் நவுஷாத் என்பவர், சம்பந்தப்பட்ட மாணவி ஷரியா சட்டத்தை மீறிவிட்டதாகக் கூறி, அவரை பற்றி அவதுாறு பரப்பும்விதமாக வீடியோ வெளியிட்டார்.

இது குறித்து அந்த மாணவி போலீசில் புகாரளித்தார்.

'என்னை விமர்சித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவால், நானும், என் குடும்பத்தாரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். அவரது செயல், என் சுதந்திரத்தை தடுக்கிறது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அதில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நவுஷாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே, தனக்கு எதிரான புகாரை ரத்து செய்யக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் அப்துல் நவுஷாத் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறப்படுவதாவது:

மத நம்பிக்கைகளை பின்பற்ற மாணவர் களுக்கு முழு உரிமை உள்ளது.

அதேநேரத்தில், ஒருவர்தன் மத நடை முறையை பின்பற்றும்படி மற்றொருவரை கட்டாயப்படுத்த முடியாது. மத நடைமுறை என்பது, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட விருப்பம்.

உரிமை உண்டு



தங்கள் நம்பிக்கைகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் தனி நபர்களின் நலன்களை அரசியலமைப்பு பாதுகாக்கிறது. மத வழிபாட்டு முறைகள், ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அதை மற்றவர்கள் மீது திணிக்க முடியாது.

இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட பெண் தங்கள் வழி மத பழக்க வழக்கங்களை பின்பற்ற உரிமை உண்டு.அதேசமயம், இந்திய அரசியலமைப்பு சட்டத்தைவிட எந்த மத நம்பிக்கையும் உயர்ந்தது அல்ல. எனவே, மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement