முன்னேற்றத்தின் தாரக மந்திரம்

திருப்பூர், மாஸ்கோ நகரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார் ரமேஷ். பனியன் நிறுவன அலுவலக உதவியாளராகப் பணியைத் துவக்கி, ஏற்றுமதியாளராக மாறியது குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்தவை:

சொந்த ஊர்: திருச்சி மாவட்டம், துறையூர். பத்து வயதில் திருப்பூர் வந்தேன். அப்பா, பனியன் தொழிலாளி. குடும்ப வறுமை நிலைகுலையச் செய்ய, பனியன் நிறுவன அலுவலக உதவியாளராக பணியைத் துவங்கினேன். டீ வாங்கித்தருவதுதான் எனது முதல் பணி. தையல் மற்றும் தையல் இயந்திரம் குறித்து முழுமையாய் அறிந்துகொண்டேன். பணியாற்றுவது பிடிக்காமல், நண்பன் கதிருடன் சேர்ந்து 85 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் நிறுவனத்தை துவங்கினேன். லாபம் கிடைத்தது.

எதிர்பாராதவிதமாக ரஷ்யாவுக்கு அனுப்பிய ஆர்டருக்கு பணம் வரவில்லை. மூன்று கோடி நஷ்டம். அது தீபாவளிப் பண்டிகைக் காலம். என்னை நம்பிய தொழிலாளருக்கு சம்பளம், போனஸ் கொடுக்க வேண்டிய சூழலில் நிலைகுலைந்தேன். துப்பாக்கியால் சுட்டு செத்து விடலாம் போல் இருந்தது.

நண்பன் கதிர், அவனது பெற்றோர், என் மனைவி என கூட்டாக கைகொடுத்தனர். நண்பன் அவனது சொத்தை விற்று கடனில் இருந்து மீள வைத்தான். பலரும் என்னைக் கைவிட்ட போதும், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்னைக் கைவிடவில்லை. இரண்டு சிறந்த வர்த்தகர்கள் கிடைத்தனர். நிறுவனம் நல்ல நிலைக்குத் திரும்பியது.

தொழிலாளர்களைப் பணி முடிந்ததும் கிளம்பச்சொல்லிவிடுவேன். இரவில் வேலை வாங்குவதில்லை. குடும்பத்தினருடன் அவர்களது மகிழ்ச்சி முக்கியம் என்று கருதுகிறேன். தொழிலாளர்களின் பொருளாதாரக் கஷ்டங்களின்போது கைகொடுத்து உதவுகிறேன்.

நிறுவனத்தின் பெயரில் கிரிக்கெட் அணியை உருவாக்கினேன். அணியினர் கோப்பைகளை வென்றும் சாதித்து வருகின்றனர்.

தொழில் துவங்க பணம் மட்டும் போதாது. வழிநடத்தி வெற்றிபெறச்செய்ய சிறந்த தொழில்நுட்ப அறிவும், செயல்பாடும் தேவை. தொழிலாளரிடம் அனைத்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தாரக மந்திரமாக சொல்லிக் கொண்டே இருப்பேன். நானும் தொழிலாளருடன் சேர்ந்து தையல் இயந்திரத்தில் அமர்ந்து இப்போது வரை வேலை செய்கிறேன்.

Advertisement