விவசாய நிலத்தில் பதுக்கிய 200 லிட்டர் ஊறல் பறிமுதல்

திருத்தணி:தமிழக- --ஆந்திர மாநில எல்லையான திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் மிட்டகண்டிகை பகுதியில், சாராய விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

ஆந்திராவில் இருந்து சாராய பாக்கெட்டுகள் கொண்டு வந்து நல்லாட்டூர் பகுதியில் விற்கப்பட்டு வந்தது.

இதையடுத்து மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாள் உத்தரவின்படி ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் மற்றும் கனகம்மாசத்திரம் போலீசார் ஒருங்கிணைந்து சாராய விற்பனையை கண்காணித்து வீடுகளில் பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

நேற்று மிட்டகண்டிகையில் விவசாய நிலத்தில் சாராயம் காய்ச்சுவதற்கு, சாராய ஊறல் புதைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கனகம்மாசத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் மேற்கண்ட இடத்தில் உள்ள சோதனை செய்தனர்.

மிட்டகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ரகுராம், 55 என்பவரின் நிலத்தில், ஒரு பேரலில், 200 லி., சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். ரகுராம் மற்றும் அவருக்கு உதவிய ரவி, 40 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில், ஆந்திர மாநிலம் நகரி அடுத்த கே.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வினோத், 42 என்பவர் சாராய ஊறல் தயாரித்து, ரகுராம் விவசாய நிலத்தில், பதுக்கி வைத்தது தெரிந்தது. வினோத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement