சுற்றுலா பயணியரை கவரும் வகையில் பூண்டி நீர்தேக்கம்... புத்துயிர்!: சுற்றுச்சூழல் பூங்கா, நடைபயிற்சி பாதை பணி ஜோர்

திருவள்ளூர்:சுற்றுலா பயணியரை கவரும் வகையில், பூண்டி நீர்தேக்கத்தில், சுற்றுச்சூழல் பூங்கா, அறிவியல் பூங்கா வரிசையில் தற்போது, நடைபயிற்சி மேற்கொள்வோருக்கான வசதியினை சுகாதார துறையினர் செய்துள்ளனர். இதன் வாயிலாக, பூண்டி நீர்தேக்கம் சுற்றுலாவாசிகளின் புகலிடமாக மாறுகிறது.

சென்னை மாநகர மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவதற்காக திருவள்ளூர் மாவட்டம், பூண்டியில் கடந்த, 1944ல் நீர்தேக்கம் கட்டப்பட்டது. கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, 65 லட்சம் ரூபாய் மதிப்பில், இந்த நீர்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. நீர்தேக்கம், பூண்டி, சென்றாயன்பாளையம், மேட்டுப்பாளையம், பாண்டூர், பட்டரைபெரும்புதுார் என, 121 ச.கி.மீட்டர் துாரம் பரந்து, விரிந்து காணப்படுகிறது.

பருவ மழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால், நீர்தேக்கம் நிரம்பினால், பேபி கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் என, இரு கால்வாய் வாயிலாக, சோழவரம், புழல் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பூண்டி மற்றும் சதுரங்கபேட்டை கிராமம் அருகில் நீர்தேக்க கரையோரத்தில் அமைக்கப்பட்ட அழகிய பூங்கா காலப்போக்கில் சிதிலமடைந்து விட்டது.

ஒவ்வொரு ஆண்டும், காணும் பொங்கல் மற்றும் விடுமுறை தினங்களில், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, பொதுமக்கள், குழந்தைகளுடன் நீர்தேக்கத்திற்கு வந்து, பார்வையிட்டு, இளைப்பாறி சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், பூண்டி நீர்தேக்கத்தை ஒட்டியுள்ள சதுரங்கப்பேட்டையில், 3.33 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி கடந்த ஆண்டு 3 கோடி ரூபாய் மதிப்பில், துவங்கியது. இங்கு, நீர் விளையாட்டு, படகு சவாரி, சாகச விளையாட்டு மற்றும் பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட சுற்றுலாத்தலமாக இது அமைக்கப்பட உள்ளது.

உணவகம், சமையல் அறை, வரவேற்பு மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய புதிய நிர்வாக கட்டடம்; அணுகு சாலை, உட்புற சாலை மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற பணி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வாயிலாக வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுற்றுலா பயணியரை கவரும் வகையில் அலை குளம், செயற்கை நீர்வீழ்ச்சி, 'ஜிப் லைனிங்', வழிகாட்டி பாறை ஏறுதல், தங்கும் அறை ஆகிய சுற்றுலா வளர்ச்சி பணிகள் எற்படுத்தவும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், சுகாதார துறையினர், பூண்டி நீர்தேக்க கரையில், 8 கி.மீட்டர் வரை நடைபாதை உள்ளதால், அங்கு நடைபயிற்சி செய்வதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்காக, நடைபயிற்சி பலன் குறித்த விபரம், அமரும் இருக்கை வசதி உள்ளிட்டவற்றை செய்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணி துறை-நீர்வள துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பூண்டி நீர்தேக்கத்தை சுற்றுலா தளமாக மாற்ற, கலெக்டர் பிரபுசங்கர் பெருமுயற்சி எடுத்து வருகிறார். அந்த வகையில், சுற்றுச்சூழல் பூங்கா, அறிவியல் பூங்கா, பராமரிப்பில்லாத பூங்காக்களை மறு பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது, பூண்டி நீர்தேக்கத்தை மேலும் அழகுபடுத்தும் வகையில், நடை பயிற்சியாளர்களை உற்சாகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக, பூண்டி நீர்தேக்க ஷட்டர் பராமரிப்பு பணி முடிந்ததும், 8 கி.மீட்டர் நீர்தேக்க கரை சீரமைக்கப்பட உள்ளது. அதன் பின், பூண்டி நீர்தேக்கம் சுற்றுலாவாசிகளின் புகலிடமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement