ஊராட்சி தலைவியை வெட்டிக்கொல்ல முயற்சி ஆறு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை ரூ.7.60 லட்சம் அபராதமும் விதிப்பு

திருநெல்வேலி,:திருநெல்வேலி அருகே வடக்கு தாழையூத்தில், பெண்களுக்கு கழிப்பறை கட்ட முயன்ற ஊராட்சி தலைவியை அரிவாளால் வெட்டிக்கொல்ல முயன்ற, ஆறு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 7.60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

வடக்கு தாழையூத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் பொய்யாமணி என்பவர் மனைவி கிருஷ்ணவேணி, 51. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். தாழையூத்து ஊராட்சி தலைவர் பதவி 2006ல் பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டதால், தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி தலைவரானார்.

ஐந்தாண்டுகள் அவர் பணிபுரிய கடும் எதிர்ப்பு நிலவியது. பெண்களுக்கான கழிப்பறை கட்ட அவர் முயன்றார். ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து நிதி தரப்படவில்லை. கலெக்டர் நிதியும் கடைசி நேரத்தில் வேறு பஞ்சாயத்திற்கு போனது.

எனவே தாழையூத்து தனியார் சிமென்ட் ஆலை நிறுவனத்தை அணுகி, புறம்போக்கு பகுதியில் கழிப்பிடம் கட்ட முயன்றார். இதற்கு அப்போதைய ஊராட்சி வார்டு உறுப்பினர் சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்தார். பணி துவங்கும் நாளில் அவர் தகராறு செய்ததால் நிறுத்தப்பட்டது.

கடந்த 2011 ஜூன் 13 இரவு ஊராட்சி அலுவலகத்திலிருந்து, கிருஷ்ணவேணி ஆட்டோவில் சென்ற போது ஒரு கும்பல் வழிமறித்து அரிவாள், கட்டைகளால் தாக்கினர். அவரது வலது காது, இரு விரல்களும் துண்டாயின.

கழுத்திலும் பலத்த வெட்டுக் காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கொலை தாக்குதல் நடந்து, 13 ஆண்டுகளைக் கடந்து தற்போதும் அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வருகிறார். அவரை கொல்ல முயன்ற வழக்கில் அப்போதைய வார்டு உறுப்பினர் சுப்பிரமணியன் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. நீதிபதி சுரேஷ்குமார் அக்., 8ல் தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்ட ராமகிருஷ்ணன், சந்தனமாரி விடுவிக்கப்பட்டனர்.

நடராஜன் என்பவர் இறந்து விட்டார். மீதமுள்ள ஆறு பேரும் குற்றவாளிகள் என அன்று தீர்ப்பளித்தார். நேற்று அவர்களுக்கு தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்தார்.

சுப்ரமணியன், 60, சுல்தான் மைதீன், 59, ரவுடி ஜேக்கப், 33, கார்த்திக், 34, விஜய் ராமமூர்த்தி, 34, பிரவீன் ராஜ், 32 ஆகிய ஆறு குற்றவாளிகளுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பிரவீன்ராஜுக்கு 1.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற ஐந்து பேரும் தலா, 1.30 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.

அபராதத் தொகையான 7.60 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட கிருஷ்ணவேணிக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.



பெண்களுக்கு கழிப்பறை இல்லை

கும்பலால் வெட்டப்பட்ட கிருஷ்ணவேணி, அக்., 8ல், நீதிமன்றத்தில் ஆஜரானார். கழுத்துப் பகுதியில் வெட்டு காரணமாக, அவருக்கு புண் ஆறாமல் உள்ளது. அதை நீதிபதி நேரில் பார்த்தார். தண்டனை குறித்து கிருஷ்ணவேணி கூறியதாவது:கடந்த 13 ஆண்டுகளாக ஆறாத ரணமாக உள்ளது. குற்றவாளிகளுக்கு பயந்து பெரும்பான்மையான சாட்சிகள் சாட்சியம் சொல்ல மறுத்து விட்டனர். ஆனால், நான் வழக்கில் உறுதியாக இருந்தேன். வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு நன்றி.இத்தகைய தீர்ப்புகள் பெண்கள் அரசியல் பொறுப்புகளுக்கு வருவதற்கான துணிவை தரும். வடக்கு தாழையூத்து மேலதாழையூத்து பகுதிகளில் பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement