திருப்போரூர் - நெம்மேலி சாலையில் மரண பள்ளங்களால் விபத்து அபாயம் தினமும் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில், ஓ.எம்.ஆர்., சாலை, இ.சி.ஆர்., சாலைகளை இணைக்கும் வகையில், திருப்போரூர் -நெம்மேலி சாலை உள்ளது. இச்சாலையின் இடையே பகிங்ஹாம் கால்வாயில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

கானத்துார், முட்டுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, திருவிடந்தை, கிருஷ்ணன் காரணை, பட்டிபுலம், சாலவான்குப்பம் உள்ளிட்ட கிராம வாசிகள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சாலை குறுகிய நிலையில், குண்டும் குழியுமாக உள்ளது. ஒரே நேரத்தில் எதிரெதிர் வாகனங்கள் செல்லும்போது, ஒதுங்கி செல்ல இடவசதி இல்லை.

இதனால், சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் தவறி விழும் அபாய நிலை உள்ளது. அதுமட்டுமின்றி, மின் விளக்குகள் அமைக்கப்பட்டாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது.

இதனால், அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சில நேரத்தில் ஒரே நாளில் நான்கைந்து விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களும் நடக்கின்றன.

எனவே, இச்சாலையில் உள்ள மரண பள்ளங்களால், ஏதேனும் உயிர்பலி ஏற்படுவதற்கு முன், இச்சாலையை சீரமைத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement