தேவைக்கு ஏற்ப இல்லை சிறப்பு ரயில்கள் * அதிருப்தியில் தென்மாவட்ட பயணிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்:சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்ட பயணிகள் சொந்த ஊர் வந்து செல்ல தேவைக்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததாலும், கடைசி நேரத்தில் ஒரிரு சிறப்பு ரயில்களை இயங்குவதாலும் அதிருப்தி நிலவுகிறது.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் தொழில் ரீதியாக வசிக்கின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு வந்து செல்ல 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். தொடர் விடுமுறை நாட்களில் தக்கலில் கூட டிக்கெட் கிடைக்காமல் இவர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை இருப்பதால் ஏராளமான தென் மாவட்ட பயணிகள் ரயில்களில் முன்பதிவு செய்த நிலையில் அனைத்து ரயில்களிலும் அதிகளவில் காத்திருப்போர்பட்டியல் இருந்தது. தக்கலில் கூட இவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.

தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் இயக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் காத்திருந்தனர். ஆனால் போதிய அளவிற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்காததால் ஏமாற்றமடைந்தனர். அதிக கட்டணத்தில் ஆம்னி பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் தாம்பரம் --கோவை, தாம்பரம்- -திருச்சி, சென்னை --கன்னியாகுமரி, சென்னை- -கோட்டயம் உட்பட சில சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது. தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்த்தது போல செங்கோட்டை, திருநெல்வேலி, மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் தென் மாவட்ட பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Advertisement