ஆயுதபூஜையால் பூக்கள் விலை விர்... மல்லி கிலோ ரூ.1500க்கு விற்பனை

திண்டுக்கல்:ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு திண்டுக்கல்லில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. மார்க்கெட்டில் மல்லிப்பூ கிலோ ரூ.1500க்கு விற்பனையானது.

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. நிலக்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கும் அவை அனுப்பப்படுகிறது. வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

தற்போது ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நேற்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. மாலை கட்டுவதற்கான பூக்கள் விலை உச்சம் தொட்டன. சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.600 க்கு விற்ற மல்லி நேற்று ரூ.1500 க்கு விற்பனையானது. கனகாம்பரம் ரூ.1000, முல்லை ரூ.600, ஜாதிப்பூ ரூ.400, சம்பங்கி ரூ.350, பன்னீர் ரோஸ் ரூ.170, கோழிக்கொண்டை ரூ.50, செவ்வந்தி ரூ.300, அரளி ரூ.600, வாடாமல்லி ரூ.50, செண்டு மல்லி ரூ,70க்கு விற்பனையாயின.

மேலும் விரட்சிப் பூ ரூ.170, மருகு ரூ.100, மரிக்கொழுந்து ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.400, தாமரை ஒன்று ரூ.10 என விற்பனையாயின. பூக்கள் விலை உயர்வால் பூ சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement