சம்பளம் ஒரு பொருட்டல்ல... தொழிலில் சிறப்பதே முக்கியம்

''அன்னுாரில் இருந்து திருப்பூர் 35 கிலோமீட்டர். தினமும், வந்து செல்லும் பஸ் செலவு 20 ரூபாய்; வார சம்பளம் 500 ரூபாயில், 120 ரூபாய் பஸ் டிக்ெகட்டுக்கே போய்விடும்; மீதமுள்ள 350 ரூபாய் கொண்டு குடும்பம் நடத்தினோம்... இன்றைக்கு ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் அளவுக்கு பேப்ரிக் விற்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறோம்'' என்கிறார் மருதாச்சல மூர்த்தி.

அவர் நம்மிடம் பகிர்ந்தவை:

அன்னுார் அடுத்த ஊத்துப்பாளையத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்தேன். ஓராண்டு இடைவெளியில் பெற்றோர் இறந்து விட, கிணற்றிலும் தண்ணீர் வற்றியது. 2000ம் ஆண்டில் திருப்பூருக்கு சென்றால் பிழைக்கலாம் என்று வேலை தேடி வந்தேன்.

பங்களா ஸ்டாப் அருகே உள்ள ஒரு பேப்ரிக் விற்கும் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். வார சம்பளம் 500 ரூபாய்; அதில் பஸ்சுக்கு 120 ரூபாய் போக 350 ரூபாய் கொண்டு குடும்பம் நடத்தினோம். பாலியஸ்டர் பேப்ரிக் விற்பனை நுட்பங்களை நன்கு கற்றுக் கொண்டேன்.

2006ல் பி.என்., ரோடு கிச்சப்பன் ஆஸ்பத்திரி அருகே 1200 ரூபாய் வாடகைக்கு சிறிய கடையை பிடித்தேன். துணியை கடைகளில் வாங்கி ,சில வாடிக்கையாளர்களுக்கு விற்கத் துவங்கினேன்.

தினமும் அன்னுாரில் இருந்து வந்து சென்று கொண்டிருந்தேன். அப்படியே தொழிலை பழகிவிட்டேன்; 2006ல் சாந்தி தியேட்டர் பின்புறம் 6000 ரூபாய் வாடகையில் கடை வைத்தேன். மூன்று ஆண்டு கழிந்தது. 2009ல் குமரானந்தபுரத்தில் 22,000 ரூபாய் வாடகைக்கு குடோனை பிடித்து எனது தொழிலை விரிவாக்கம் செய்தேன்.

இப்படியே எட்டு, ஒன்பது ஆண்டுகள் தொழில் நடத்தினேன். சூரத் மற்றும் லுாதியானாவில் உள்ள பிராண்டட் கம்பெனிகளை நேரில் சென்று பார்த்து அவர்களுடைய வினியோகஸ்தராக மாறினேன்.

தரமான பிராண்டட் துணிகளை வழங்கியதால், திருப்பூரில் வாடிக்கையாளர்கள் பெருகினர். கொரோனா ஊரடங்குக்கு பிறகு சூரத் சென்று மீண்டும் தொழிலை விரிவாக்கம் செய்தோம். சிறிய கடையாக இயங்கியது இன்று பெரிய குடோனாக மாற்றி இந்த ஆண்டு முதல் லுாதியானா சூரத் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பாலியஸ்டர் பேப்ரிக் ரகங்களை விற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது 5000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இளைஞர்களுக்கு நான் கூறுவதும் அதுதான்; சம்பளம் ஒரு பொருட்டல்ல; தொழிலை நன்கு கற்றுக்கொண்டு சொந்தமாக தொழில் செய்தால், திருப்பூரில் நிச்சயமாக முன்னேறலாம்.

''வந்தாரை வாழவைக்கும் ஊர் திருப்பூர் என்பது உண்மைதான். தொழிலாளியாக வருபவர்கள் நன்கு தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும்; ஒரு கட்டம் வந்ததும் சொந்த காலில் நிற்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும். திருப்பூரை நம்பி வந்தேன்; கடுமையாக உழைத்தேன். இன்று உயர்ந்திருக்கிறோம்'' என்று கூறுகிறார் மருதாச்சலமூர்த்தி.

Advertisement