பரமக்குடியில் அலங்கோல நிலையில் நகராட்சி ஆர்ச்

பரமக்குடி: பரமக்குடியின் பெயர் சொல்லும் வகையிலான நகராட்சி ஆர்ச் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக இருக்கிறது.

பரமக்குடி நகராட்சி ராமேஸ்வரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு பல லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில் காந்தி சிலை, ஆர்ச் என பெயர் சொல்லும் வகையில் குறிப்பிட்ட சின்னங்கள் உள்ளன.

இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருந்து பரமக்குடிக்குள் நுழைய ஆர்ச் கட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு லாரி மோதி மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஆர்ச் சேதமடைந்தது.

பின்னர் பரமக்குடியின் அடையாளத்தை மீட்டெடுக்கும் வகையில் அதே இடத்தில் நகராட்சி பொன்விழா ஆண்டு ஆர்ச் கட்டப்பட்டது.

ஆனால் கட்டப்பட்ட நாள் முதல் பராமரிக்கப்படாமல் ஆங்காங்கே டைல்ஸ் சேதமடைந்துள்ளது.

மேலும் போஸ்டர் ஓட்டுபவர்கள், பிளக்ஸ் பேனர்கள் வைப்போர் ஆர்ச்சை மையப்படுத்தி கட்டி வைக்கின்றனர். இதனால் ஒட்டுமொத்தமாக ஒரே பெயர் சொல்லும் ஆர்ச் மகத்துவம் இழக்கும் நிலை உள்ளது.

ஆகவே ஆர்ச் அழகை மீட்டெடுக்க மின் விளக்குகளை பொருத்தி நகராட்சி நிர்வாகம் புத்துயிரூட்ட வேண்டும். தொடர்ந்து ஆர்ச் பில்லர்களில் போஸ்டர்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement