விருதுநகர் நான்கு வழிச்சாலையில் நிலையற்ற தன்மையில் தடுப்புகள் வாகன ஓட்டிகள் அச்சம்

விருதுநகர்: விருதுநகர் நான்கு வழிச்சாலையில் புது பஸ் ஸ்டாண்ட் ரோடு இணையும் இடத்தில் நிலையான தடுப்புகள் இல்லாத நிலை நீடிக்கிறது. இதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் - மதுரை நான்கு வழிச்சாலையில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள் சிரமமின்றி செல்வதற்கும், வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்காகவும் சிவகாசி செல்லும் சர்வீஸ் ரோட்டில் தடுப்புகள் வைக்கப்பட்டது.

ஆனால் நான்கு வழிச்சாலையில் மற்ற இடங்களில் வைக்கப்பட்டதை போல முழுவதும் பேரிகார்டு தடுப்புகள் இல்லாமல் பிளாஸ்டிக் தடுப்புகள் வைக்கப்பட்டு கயிற்றால் கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்புகள் காற்றின் வேகம், வாகனங்கள் வேகமாக செல்லும் போது வரும் எதிர்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் நிலையற்ற தன்மையில் உள்ளது.

இவை எப்போது வேண்டுமானாலும் நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகனங்களில் விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விபத்து நடக்காமல் இருப்பதாற்காக கண்காணிப்பு பணியை செய்யும் போலீசார் கண்டும் காணாமல் உள்ளனர்.

மேலும் புது பஸ் ஸ்டாண்ட் ரோடு வழியாக சிவகாசி சர்வீஸ் ரோட்டிற்கு வாகனங்கள் செல்வதை தடுக்க தடுப்புகள் வைத்தும் சிலர் டூவீலரில் அத்துமீறி பயணிக்கின்றனர். இதனால் மதுரை நோக்கி வேகமாக செல்லும் வாகனங்களில் மோதும் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

எனவே விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சிவகாசி சர்வீஸ் ரோட்டை மறித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடுப்புகளை அகற்றி விட்டு நிரந்தர தடுப்புகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement