சாலையோர வியாபாரிகளிடம் வசூல் நகர் விற்பனைக்குழுவிடம் புகார்

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் நகர விற்பனைக்குழு கூட்டம் நகர் அமைப்பு அலுவலர் ஹாசிப்ரகுமான் தலைமையில் நடந்தது. விற்பனைக்குழு உறுப்பினர்கள் ராக்கு, பாரதி, சையது முகமது, ஆதிராஜ், முத்து முருகன், ரவீந்திரன் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் வியாபாரிகள் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் கடைகளை நடத்த வேண்டும்.

பஸ் ஸ்டாண்ட் முன் பகுதியில் கடைகள் நடத்தக்கூடாது. அதேபோல் பஸ் ஓடுதளம் பகுதியில் நடைபாதை கடைகள் அமைக்கக்கூடாது என்றும் தொண்டி சாலையின் வடபுறம் அரண்மனை முதல் பெட்ரோல் பங்க் வரை நகராட்சியில் ஒதுக்கீடு செய்யப்படும் அளவிற்கு மட்டும் மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாதவண்ணம் நடைபாதையில் தள்ளுவண்டி மூலம் கடைகள் அமைத்துக்கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கினர்.

சாலையோர கடை வியாபாரிகளிடம் ஒரு கடைக்கு தினமும் ரூ.100 வாங்குகிறார்கள்.

இதுவே மாதம் 3000 வரை வருகிறது. நகராட்சி பைலாவை மீறி ஒப்பந்ததாரர்கள் வசூல் செய்கிறார்கள் என்று கூட்டத்தில் புகார் அளித்தனர். அதற்கு நகர் அமைப்பு அலுவலர், கமிஷனரிடம் இது குறித்து தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நகர் எஸ்.ஐ., வைரமணி, நகராட்சி உதவி அலுவலர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement