ஐரோப்பா, மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல்: அமைதி ஏற்படுத்த பிரதமர் மோடி தலையிட கோரிக்கை

லண்டன்: மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டத்தில் மோதலில் ஏற்பட்டுள்ள நாடுகள் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட பிரதமர் மோடி தலையிட வேண்டும் என லண்டனை சேர்ந்த உலக அமைதிக்கான நீதிபதிகள் மற்றும் எழுத்தாளர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா - உக்ரைன் இடையே மோதல் நிலவி வருகிறது. உக்ரைனுக்கு , அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. அந்நாட்டு ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்யாவிற்குள் சென்று தாக்க உதவும்படி உக்ரைன் கோரி வருகிறது. அப்படி தாக்குதல் நடத்தப்பட்டால், அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என ரஷ்யா எச்சரித்து உள்ளது.

இது ஒரு புறம் இருக்க மேற்கு ஆசியாவில், இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் மற்றும் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களுக்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. அதேநேரத்தில் இந்த போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, உக்ரைன், இஸ்ரேல், ஈரான் நாடுகளுடன் இந்தியா நல்ல உறவை பேணி வருகிறது.

இந்நிலையில், லண்டனில் நடந்த உலக அமைதிக்கான நீதிபதிகள் மற்றும் எழுத்தாளர்கள் மாநாட்டில், 4 நாடுகளுடனும் நல்ல நட்புறவை கொண்டுள்ள இந்தியா, போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுடன் பேசி, பதற்றம் மேலும் அதிகரிக்காமலும், தூதரக ரீதியிலும், பேச்சுவார்த்தை மூலமும் பேசி தீர்வு காண்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக, பிரதமர் மோடி சம்பந்தப்பட்ட நான்கு நாடுகளுடனும் பேசி, அந்த பிராந்தியங்களில் அமைதி கொண்டு வருவதற்கு உதவி செய்வதாக உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண, அனைத்து அரசுகள், சர்வதேச அமைப்புகள், சிவில் சமூகங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

போரினால் உண்டான பதற்றம் நிறுத்தப்படாவிட்டால், இந்த உலகம் மூன்றாவது உலக போருக்கு தள்ளப்படும். இதனால் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதுடன், சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் கடுமையான இழப்பு ஏற்படும் என அந்த அமைப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

Advertisement