சொந்த மண்ணில் பாக்., சோகம் * இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

முல்தான்: டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக பாகிஸ்தான் மண்ணில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி, இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் முல்தானில் நடந்தது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 556/10 ரன் எடுத்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 823/7 ரன் குவித்து 'டிக்ளேர்' செய்தது. நான்காவது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 152/6 ரன் எடுத்து 115 ரன் பின்தங்கி இருந்தது. சல்மான் ஆகா (41), ஆமெர் ஜமால் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.
போராட்டம் வீண்
நேற்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. சல்மான், ஆமெர் என இருவரும் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடினர். சல்மான் அரைசதம் எட்டினார். முதல் ஒரு மணி நேரம் தாக்குபிடித்த இந்த ஜோடி, 7வது விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்த போது, சல்மான் (63), லீச் பந்தில் அவுட்டானார்.
தொடர்ந்து அசத்திய லீச், ஷகீன் அப்ரிதியை (10) அவுட்டாக்கினார். பின் இவரது சுழலில், நஷீம் ஷா (6) ஸ்டம்டு ஆனார். அப்ரார் அகமது காய்ச்சல் காரணமாக களமிறங்கவில்லை.
பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 220 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆமெர் (55) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து அணி, இன்னிங்ஸ், 47 ரன் வித்தியாசத்தில் வென்றது. 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது. பாகிஸ்தான் மண்ணில் இதுபோல வெற்றி பெற்றது இது தான் முதன் முறை. இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார். இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் அக். 15ல் துவங்குகிறது.

முதல் அணி
டெஸ்ட் அரங்கில் முதல் இன்னிங்சில் 500க்கும் மேல் ரன் எடுத்த போதும், இன்னிங்ஸ் தோல்வியடைந்த முதல் அணியானது பாகிஸ்தான். முல்தான் டெஸ்ட் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 556 ரன் குவித்து, கடைசியில் இன்னிங்ஸ், 47 ரன்னில் தோற்றுள்ளது.
முன்னதாக 2023ல் அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 492 ரன் எடுத்தது. கடைசியில் இன்னிங்ஸ், 10 ரன்னில் இலங்கையிடம் தோற்றது.

தொடரும் தோல்வி

பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் கடைசியாக 2021ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்றது. இதன் பின் கடந்த 11 டெஸ்டிலும் வெற்றி (7 தோல்வி, 4 'டிரா') பெறவில்லை.
* இதற்கு முன் 1969-1975ல் தொடர்ந்து 11 டெஸ்டில் (1 தோல்வி, 10 'டிரா') வெற்றிபெறவில்லை.
* கடந்த ஆண்டு ஷான் மசூது கேப்டன் ஆன பின், சொந்தமண்ணில் பங்கேற்ற 6 டெஸ்டிலும் தொடர்ந்து தோற்றது.

இரண்டாவது முறை

ஆசிய மண்ணில் இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக இன்னிங்ஸ் வெற்றி (முல்தான் டெஸ்ட்) பெற்றது. முன்னதாக 1976, டில்லி டெஸ்டில் இந்தியாவை இன்னிங்ஸ், 25 ரன்னில் வென்றது.

5 வது ஏமாற்றம்
முதல் இன்னிங்சில் 500 ரன்னுக்கும் மேல் எடுத்த போட்டிகளில் அதிகமுறை தோற்ற அணியானது பாகிஸ்தான் (5 முறை). ஆஸ்திரேலியா (3) 2வதாக உள்ளது.

சபாஷ் மெக்கலம்

பிரண்டன் மெக்கலம் டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளர் ஆன பின், இங்கிலாந்து வீரர்கள் 'பாஸ் பால்' (அதிரடியாக ரன் சேர்ப்பது) முறையில் வேகமாக ரன் எடுக்கின்றனர். இவரது வருகைக்குப் பின், எதிரணிகள் முதல் இன்னிங்சில் 550 ரன்னுக்கும் மேல் எடுத்த 3 போட்டியிலும் இங்கிலாந்து வென்றுள்ளது.
தவிர, ஒட்டுமொத்தமாக எதிரணிகள் முதல் இன்னிங்சில் 500 ரன்னுக்கும் மேல் எடுத்த டெஸ்டில், இங்கிலாந்து அணி 9ல் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா (6 முறை) அடுத்து உள்ளது.

Advertisement