'ஹாட்ரிக்' வெற்றி நோக்கி இந்தியா... * இன்று வங்கத்துடன் 3வது மோதல்

ஐதராபாத்: மூன்றாவது 'டி-20' போட்டியில் அசத்தி, 'ஹாட்ரிக்' வெற்றி பெற காத்திருக்கிறது இந்திய அணி.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள்கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல்இருபோட்டியில் வென்றஇந்திய அணி தொடரை கைப்பற்றியது. இன்று ஐதராபாத்தில் மூன்றாவது போட்டி நடக்க உள்ளது.
புதிய பயிற்சியாளர் காம்பிர் வியூகத்தில் வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு இந்தியா செயல்படுகிறது. மழை குறுக்கிட்ட போதும், வங்கதேசத்திற்கு எதிரான கான்பூர் டெஸ்டில் கலக்கல் வெற்றி பெற்று, தொடரை 2-0 என முழுமையாக வென்றது. தற்போது 'டி-20' தொடரையும் 3-0 என முழுமையாக வெல்வதில் உறுதியாக உள்ளது.
இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் வலுவாக உள்ளது. பீல்டிங்கிலும் வீரர்கள் அசத்துகின்றனர். கேப்டன் சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங் ரன் மழை பொழிகின்றனர். 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார் ரெட்டி கடந்த போட்டியில் 34 பந்தில் 74 ரன், 2 விக்கெட்டும் வீழ்த்தினார். இவரது ரன் வேட்டை இன்றும் தொடரலாம்.
சுதாரிப்பாரா சாம்சன்
துவக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் (29, 10), அபிஷேக் சர்மா (16, 15) பெரிதாக சோபிக்கவில்லை.
அதிரடி துவக்கம் கிடைக்காததால், மிடில் ஆர்டரில் நெருக்கடி ஏற்படுகிறது. இன்று சாம்சன் சுதாரிக்க தவறினால், தேர்வாளர்களின் பார்வை மற்றொரு கீப்பர், பேட்டர் ஜிதேஷ் சர்மா மீது விழலாம். 'ஆல்-ரவுண்டர்' ஹர்ஷித் ராணா, 'ஸ்பின்னர்' ரவி பிஷ்னோய் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இதனால் அபிஷேக் விஸ்வரூபம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
பந்துவீச்சில் 'புயல் வேக' மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங் மிரட்டுகின்றனர். 'சுழலில்' அசத்த வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.
வங்கதேசத்தை பொறுத்தவரை கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷான்டோ, லிட்டன் தாஸ், முஸ்தபிஜுர் போன்ற அனுபவ வீரர்கள் ஏமாற்றுவது பலவீனம்.
சீனியர் மஹமுதுல்லா தனது கடைசி 'டி-20' போட்டியில் அசத்தினால் நல்லது.

Advertisement