உள்நாட்டு சுற்றுலாவுக்கு வாய்ப்புகள் அதிகம்; சொல்லுது உலக சுற்றுலாத்துறை!

பெர்த்: அடுத்த பத்து ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் உள்நாட்டு சுற்றுலாவின் பங்களிப்பு, 5 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என உலக சுற்றுலா அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சமீபத்தில்,'உலகளாவிய அளவில் உள்நாட்டு சுற்றுலாவை ஆதரித்தல்' என்ற உச்சி மாநாடு நடந்தது. இந்த நிகழ்ச்சியை, உலக சுற்றுலா அமைப்பு(டபுள்யூ.டி.டி.சி) ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில் உலகப் பொருளாதாரத்தில் உள்நாட்டு சுற்றுலாத்துறையின் பங்களிப்பு, அடுத்த 10 ஆண்டுகளில், 5 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து உலக சுற்றுலா அமைப்பின் தலைவர் ஜூலியா சிம்ப்சன் கூறுகையில்,



“சுதேசி சுற்றுலா என்பது வளமான கலாசார பாரம்பரியங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்ல; இது சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பது, நிலையான வேலைகளை உருவாக்குவது ஆகும்.


விலைமதிப்பற்ற கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில், பொருளாதார வளர்ச்சியை, குறிப்பாக தொலைதூர பகுதிகளில், உள்நாட்டு சுற்றுலாவின் மகத்தான திறனை நிரூபிக்கிறது.

சுற்றுலா மூலம் கிடைக்கும் உண்மையான அனுபவங்களுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் வரும் காலங்களில் உலகம் முழுவதுமே உள்நாட்டு சுற்றுலாத் துறை பன்மடங்கு வளர்ச்சி பெற வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு சிம்ப்சன் கூறினார்.


ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், 2024ம் ஆண்டில் உலகளாவிய சுற்றுலாத் துறை மீண்டும் உயிர் பெற்று வருகிறது என்றும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.


25வது உலகளாவிய உச்சி மாநாடு அடுத்த ஆண்டு ரோமில் நடைபெறும் என்றும் உலக சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது.

Advertisement