போலிப்பத்திரம் தயாரித்து மோசடி  செய்தவர் கைது

கோவை, : கோவை, ஒண்டிப்புதுார், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சாந்தாமணி, 42. இவர், அதே பகுதியில், 25 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசிக்கிறார். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்தார்.

இவருக்கு, சூலுார் முத்துப்பள்ளன் வீதியைச் சேர்ந்த மணிகண்டன், 29, பழக்கமானார். அறக்கட்டளை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், சாந்தாமணிக்கு புது வீடு வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.

பத்திர செலவை மட்டும் ஏற்றுக்கொள்ளுமாறும், மீதித் தொகையை, அறக்கட்டளையில் ஏற்பாடு செய்து, வீடு வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளார். அதை நம்பிய சாந்தாமணி, பத்திர செலவுக்கு பணம் கொடுத்துள்ளார்.

போலியாக ஒரு கிரைய பத்திரத்தை தயார் செய்து கொடுத்த மணிகண்டன், பட்டணம் பகுதியில் உள்ள ஒரு வீட்டை காட்டியுள்ளார்.

அவ்வீட்டில், சிறு பராமரிப்பு பணியிருப்பதாக கூறி, மீண்டும் பணம் கேட்டுள்ளார். சாந்தாமணி நகைகளை அடகு வைத்து, 1.39 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அத்தொகையை பெற்றுக்கொண்ட மணிகண்டன், தன்னிடம் 10 வீடுகள் இருப்பதாகவும், வீடு இல்லாதவர்கள் இருந்தால் சொல்லுமாறு கூறியுள்ளார்.

இதை நம்பிய சாந்தாமணி தனது உறவினர்களை அறிமுகம் செய்துள்ளார். சாந்தாமணி உட்பட 11 பேரிடம், 10 லட்சத்து, 72,500 ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், வீட்டை காட்டாமல் நாட்களை கடத்தி வரவே, சிங்காநல்லுார் போலீசில் சாந்தாமணி புகார் அளித்தார்.

விசாரணையில், மணிகண்டன் பலரை ஏமாற்றியிருப்பது தெரியவந்ததால், போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement