'அவ்வையின் கள் குடுவை' தந்த அற்புத கவிஞர் அம்முராகவ்

'மடித்த விரல்களுக்குள்

சிறு சங்கினைப் பதித்து ஊதுகிறேன்

அக்காக் குருவியின் அதே தவிப்பில்

அத்துவான மணல் காட்டில்

உன் பாதம்பட்டிருந்த தடங்கள்

யாவும் புரளத் தொடங்கின

நீ நினைவில் வைத்திருக்கச் சொன்ன கடலலை மறுபடியும் வரவேயில்லை!

நீயும்தானே...'

என்பது போன்ற மனிதமன உணர்வுகளோடு ஒன்றிப்போன கவிதை வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் அம்மு ராகவ். இவரது 'ஆதிலா', 'அவ்வையின் கள் குடுவை' என்ற கவிதை நுால்கள், 'பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை; உண்மை முனங்கினாலே போதும்' என்ற நேர்காணல் தொகுப்பு நுால் போன்றவை பெரிதும் கவனம் ஈர்த்தவை. இவரது கவிதைகளில் அதிகம் பெண் உணர்வுகள், மானிடத்தின் நுண் உணர்வுகள் இடம் பெற்றிருக்கும்.

தேனியை சேர்ந்த இவர் கூறியதாவது: எனது பாட்டி, அம்மா இருவரும் புத்தக வாசிப்பாளர்கள். அவர்களை பார்த்து எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உருவானது. அவர்களுக்கு நுாலகத்தில் புத்தகங்கள் எடுத்து வழங்குவது என் சிறுவயது வழக்கம். இதனால் பல எழுத்தாளர்களின் பெயர்கள், புத்தகங்கள் சிறுவயதிலேயே அறிமுகம் ஆனது. என் மனதில் தோன்றியதை எழுதுவது பள்ளி பருவத்திலே தொடங்கியது. அப்போதே ஹைக்கூ கவிதை எழுதுவேன். திருமணத்திற்கு பின் எழுதுவது தடைபட்டது. ஆனால் புத்தகங்கள் படிப்பது தொடர்ந்தது.

15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சமூக ஊடகங்கள் மூலம் எழுத துவங்கினேன். மனதில் பட்டதை எழுத அம்முராகவ் என்ற புனைப்பெயரில் எழுதினேன். அம்மு எனது செல்லபெயர், ராகவேந்திரர் சுவாமி பிடிக்கும் என்பதால் ராகவ் என சேர்த்தேன். நான் தான் இப்பெயரில் எழுதுகிறேன் என வீட்டில் உள்ளவர்களுக்கு தற்போதுதான் தெரியும். கதைகளை சித்ரா சிவன் என்ற இயற்பெயரில் எழுதுகிறேன்.

எனது ஆதிலா கவிதை புத்தகம் பல தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றது. ஆதிலா என்பது அரபு வார்த்தை. நேர்மையானவள் என அர்த்தம். இதில் என் இஸ்லாமிய தோழிகள் மூவர் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.

அவ்வை பல நுாறு ஆண்டுகளுக்கு முன் ஓர் அரசனுடன் நண்பனாகவும், போரை தடுத்து நிறுத்தும் பெண்ணாக, அரசர் அதியமானுடன் சமமாக அமர்ந்து கள் உண்ணும் அளவிற்கு ஆளுமையுடன் இருந்தது அவர் மீது ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் தருகிறது. இதனால் அவ்வையின் கள் குடுவை என 2வது புத்தகத்திற்கு பெயர் வைத்தேன்.

கவிதை எழுதுவதன் மூலம் பல எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது. எழுத்தாளர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாப்பரியா, தமிழ்செல்வம், வேலராமமூர்த்தி, சாலமன்பாப்பையா உள்ளிட்ட 25 பேரை நேர்காணல் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இருந்து 13 நேர்காணல்களை 'பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை உண்மை முனங்கினாலே போதும்' என்ற புத்தகமாக வெளியிட்டேன்.

தற்போது பெண்களின் உலகம் பற்றி நாவல் எழுதி வருகிறேன். தொடர்ந்து இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறேன்.

நான் படித்த நுாற்றுக்கும் மேலான புத்தகங்களுக்கு சோஷியல் மீடியாக்களில் விமர்சனம் எழுதி உள்ளேன். புத்தகங்கள் வழங்கிய அனுபவத்தையே விமர்சனமாக பதிவு செய்கிறேன்.

இன்றைய உலகில் நமது திறமைகளை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன. நவீன தொழில்நுட்பம் அளிக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்றால், முதலில் நுால்கள், இதழ்களை பெற்றோர் படிக்க வேண்டும்.

பெண் எழுத்து, ஆண் எழுத்து என தனித்து பேசக்கூடாது என்கின்றனர். ஆனால் பெண் எழுத்து என பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆண்களுக்கு எழுதுவதற்கு கிடைக்கும் சுதந்திரம், தனிமை பெண்களுக்கு கிடைப்பது இல்லை. நான் எழுதுவதற்கு எனது குழந்தைகள் ஸ்ரீநிதி, ஸ்ரீகுகன், கணவர் சிவன் என்றும் ஆதரவாக உள்ளனர்.

எனக்கு வரலாறு, கிளாசிக்கல், தொன்மம், ஆவணம் சார்ந்த புத்தகங்கள் படிக்க பிடிக்கும். தி.ஜா, அ.முத்துலிங்கம் என் ஆதர்ஷ எழுத்தாளர்கள். தற்போது எழுத்தாளர்கள் தமிழ்நதி, மாஜிதா, குணா கவியழகன், என்.ஸ்ரீராம், சரவணன் சந்திரன் படைப்புகளை விரும்பி படிக்கிறேன் என்றார்.

Advertisement