வீடியோ காலில் அசைன்மெண்ட்... சிறையில் மவுன விரதம்; கதிகலங்க வைக்கும் பிஷ்னோய் மூவ்மெண்ட்

8

மும்பை: மஹாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய பிரபல ரவுடி கும்பல், லாரன்ஸ் பிஷ்னோய் குறித்து கதிகலங்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மும்பையில் உள்ள நிர்மல் நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் நேற்றிரவு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாபா சித்திக் கொலை சம்பவத்திற்கு, சிறையில் இருக்கும் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பதும், சிறையில் இருந்தபடியே கூலிப்படையாக செயல்பட்டு கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதும் தெரிய வந்துள்ளது.


அதுமட்டுமில்லாமல், பிரபல பாடகர் சித்து மூசேவாலா, ராஜஸ்தானின் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் ஆகியோரின் படுகொலைக்கு, லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலே ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் கானை லாரன்ஸ் கும்பல் கொலை செய்ய முயன்ற சம்பவமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


பாபா சித்திக் கொலை சம்பவம் குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய குற்றப்பிரிவு டி.சி.பி., தட்டா நலவாடே கூறியதாவது: நேற்றிரவு 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக நிர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பிஸ்டல்கள் மற்றும் 28 குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.


பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் பாபா சித்திக் இல்லை. இருப்பினும், அவருக்கு 3 பாதுகாவலர்களை மும்பை போலீசார் நியமித்திருந்தனர். சம்பவம் நடக்கும் போது ஒரு பாதுகாவலர் உடன் இருந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பொறுப்பேற்றது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது, எனக் கூறினார்.


இதனிடையே, சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், பாகிஸ்தானைச் சேர்ந்த ரவுடி ஷகாஷத் பாட்டியிடம் வீடியோ காலில் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ காலில் பேசி தனது கும்பலுக்கு அசைன்மென்ட்டை கொடுத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அகமதபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஷ்னோய், கடந்த 9 நாட்களாக யாருடனும் பேசாமல், அமைதியாக இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு முறையும் இப்படி அமைதியாக இருக்கும் போதெல்லாம், அவனுடைய கும்பல் ஏதேனும் பெரிய குற்றச் செயல்களில் ஈடுபட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


இந்த வழக்கில் போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டால் மட்டுமே, இதில் தொடர்புடைய நபர்கள் சிக்குவார்கள் என்று நம்பப்படுகிறது.

Advertisement