போலி நகையை அடகு வைத்த கில்லாடிகள் கைது

சென்னை
மயிலாப்பூர், நாட்டு சுப்புராயன் தெருவைச் சேர்ந்தவர் சீத்தாராம், 32. திருவல்லிக்கேணி லாயிட்ஸ் சாலையில் அடகு கடை நடத்தி வருகிறார்.

கடந்த ஜூலை, 7 ம் தேதி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பின்டு, 43, சோனல், 38 ஆகிய இருவரும், 60 கிராம் எடையிலான நகையை, ஒரு மாதத்தில் மீட்டுக்கொள்வதாக அடகு வைத்து, 2,60,000 லட்சம் ரூபாய் பெற்று சென்றனர்.

ஒரு மாதத்திற்கு பிறகும் நகையை மீட்க வராததால் சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர், அவர்களின் நகையை சோதனை செய்து பார்த்துள்ளார். இதில், அடகு வைத்த நகை அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது. இதுகுறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் புகார் அளித்தார். மோசடியில் ஈடுபட்ட இருவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

மந்தைவெளி, ஆர்.கே. மடம் சாலையில் வசிப்பவர் பிரகாஷ்சந்த், 59. வீட்டின் முன்பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார்.

அவரது கடையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தங்க நகைகளை அடமானம் வைப்பதும், மீட்டுச் செல்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளனர்.

இதில் நன்கு பழக்கமான இருவர், கடந்த மாதம் 16ம் தேதி அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி, 23 தங்க டாலர்களை அடமானம் வைத்து, 15.31 லட்சம் ரூபாய் பெற்றுச் சென்றுள்ளனர்.

வெகுநாட்களாகியும் அதை மீட்க வராததால் சந்தேகமடைந்த பிரகாஷ் சந்த், தங்க டாலர்களை சோதனை செய்து பார்த்ததில், 9 கிராம் மட்டுமே உண்மையான தங்கம் என்றும் மற்ற அனைத்தும் போலியானதும் என்பது தெரிந்தது.

புகாரின் படி பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம்பகத், 58, சுந்தர், 42 ஆகிய இருவரை கைது செய்தனர்.

Advertisement