விசாரித்த போலீசுக்கு கத்தியால் கோடு போட்டவர் கைது

சென்னை, எழும்பூர் காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர், கரீம், 32. அவரும், எஸ்.ஐ., ஓம்பிரகாஷ் என்பவரும், எழும்பூர் பகுதியில் ரோந்து பணியில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எழும்பூர் ரயில் நிலையம் எதிரே தள்ளுவண்டி கடையில், மதுபோதையில் ஒருவர் தகராறு செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த ஓட்டுனர் கரீம், தகராறில் ஈடுபட்டவரை தடுத்து விசாரிக்க முற்பட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, சட்டைப்பையில் இருந்த கத்தியை எடுத்து, போலீஸ்காரர் கரீம் முகத்தில் கிழித்துவிட்டு தப்பியோடினார்.

உடனே, எஸ்.ஐ., ஓம்பிரகாஷ் விரைந்து கரீமை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற ஆய்வாளர் மோகன்ராஜ், காவலரிடம் நடந்ததை கேட்டறிந்தார். சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கடலுார் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, 53 என்பவர், போலீஸ் மீது தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவரை நள்ளிரவில் கைது செய்தனர்.

Advertisement