பள்ளிக்கல்வி துறையின் கபடி, எறிபந்து துவக்கம்

சென்னை, தமிழக அரசின், பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஆண்டுதோறும் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

அதன்படி, சென்னை மாவட்டத்திற்கு உட்பட 1,500 பள்ளிகளை, மொத்தம் 23 குறுவட்டங்களாக பிரித்து, போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.

அந்த வகையில், 2024 - 25ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறையின் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், நேற்று துவங்கின.

முதல்கட்டமாக, கபடி மற்றும் எறிபந்து போட்டிகள், அசோக் நகரில் உள்ள ஜி.ஆர்.டி., பள்ளி வளாகத்தில் துவங்கியுள்ளன.

இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.

ஒவ்வொரு பிரிவிலும், 23 குறுவட்டங்களில் வெற்றி பெற்ற அணிகள் மோதி வருகின்றன. மழை காரணமாக, நேற்று நடக்க இருந்து கால்பந்து போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

தொடர்ந்து, ஒவ்வொரு நாளும், 12 புதிய விளையாட்டுகள் உட்பட மொத்தம் 24 போட்டிகள் நடக்க உள்ளன.

மொத்தம் 3,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர். தடகளப் போட்டிகள், 21ம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் துவங்குகின்றன.

Advertisement