நாள் முழுவதும் பெய்த சாரல் மழையால் பாதிப்பு


நாள் முழுவதும் பெய்த சாரல் மழையால் பாதிப்பு


ஈரோடு, அக். 15-
ஈரோடு மாவட்டத்தில் மூன்று நாட்களாக அனைத்து பகுதிகளிலும், கனமழை பெய்து வருகிறது. மாநகர பகுதியில் இரு நாட்களுக்கு முன் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் அவ்வப்போது லேசான மழை பெய்தது. நேற்று காலை முதலே இருந்தே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
காலையில் பனிச்சாரல் போன்றும், சிறு துாறலாகவும் மழை பெய்தது. மதியத்துக்கு மேல் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் சக்கர வாகனங்களில் சென்றவர்கள் தடுமாறினர். அதை தொடர்ந்து, 10 நிமிடம் மழை கொட்டியது. ஆனாலும், துாறல், சாரல் என நாள் முழுவதும் மழை நீடித்தது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவ-, மாணவியர், வேலைக்கு செல்வோர் பாதித்தனர்.
* கோபியில் நேற்று காலை முதல் அடிக்கடி லேசான துாரல் மழை பெய்தபடி இருந்தது. இந்நிலையில் இரவு, 7:30 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. கோபி, புதுப்பாளையம், கரட்டூர், பாரியூர்சாலை, குள்ளம்பாளையம் உள்ளிட்ட பகுதியில், ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. சிறுவலுார், பதிப்பாளையம், கவுந்தப்பாடியிலும் கனமழை
பெய்தது.
* சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளான சிக்கரசம்பாளையம், சதுமுகை, கொமராபாளையம், தாசம்பாளையம்,கே.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே சாரல் மழை தொடர்ந்து பெய்தது. இடைவெளி விட்டு மதியம், 3:30 மணிக்கு மழை பெய்யத் தொடங்கி, 4:00 மணிக்கு மழை ஓய்ந்தது. காலை முதல் பெய்த சாரல் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
* பவானி மற்றும் சித்தோடு, லட்சுமிநகர், காலிங்கராயன்பாளையம், ஊராட்சிக்கோட்டை, தொட்டியபாளையம், சேர்வராயன்பாளையம், ஜம்பை உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை முதல் மாலை, ௪:௦௦ மணி வரை விட்டு விட்டு துாறல் மழை பெய்தது. மாலை, ௬:௦௦ மணிக்கு மேல் ௮:௦௦ மணி வரை, அவ்வப்போது கனமழை பெய்தது.
இதேபோல் அம்மாபேட்டை, சென்னம்பட்டி, பூதப்பாடி, பூனாட்சி, வெள்ளித்திருப்பூரிலும் துாறல் மழை, மாலையில் கனமழையும் கொட்டி தீர்த்தது.
மக்கள் மகிழ்ச்சி
சென்னிமலை மற்றும் சுற்று வட்டாரத்தில் கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். ஒரு வாரமாக மழை பெய்வதால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் உழவு பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, 12 மி.மீ., மழை பெய்த நிலையில், நேற்று சாரல் மழையாகவும் நீடித்தது.

Advertisement