ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல் பெண் உட்பட இருவர் கைது

திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த புட்லுார் ரயில்நிலையம் அருகே போதைப்பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.

எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் கோபிகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது புட்லுார் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஒருவர் காக்களூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரவர்மன், 40. மற்றொருவர் சென்னை ஐ.சி.எப். பகுதியைச் சேர்ந்த கமலா, 53 என தெரியவந்தது.

அவர்களிடமிருந்த மூட்டையில் தடைசெய்யப்பட்ட 800 ஹான்ஸ், 468 ஸ்வாகட், 128 கூல் லிப், 5,848 விமல், 4,278 வி1 என மொத்தம் 11,522 போதைப் பாக்குகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய்.

திருவள்ளூர் தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

l ஊத்துக்கோட்டை அருகே, முக்கரம்பாக்கம் கிராமத்தில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

ஊத்துக்கோட்டை போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள ஒரு கடையில் சோதனை செய்ததில், அங்கு விமல், 150, விஐ 120, ஹான்ஸ், 45 என மொத்தம், 315 பாக்கெட்டுகள் இருந்தன.

இதன் மதிப்பு, 12,000 ரூபாய். கடை உரிமையாளர் சேட், 25 என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement