ரோடு, வாறுகால் சேதம், செயல்படாத சுகாதார வளாகம்

சிவகாசி: ரோடு, வாறுகால் சேதம், செயல்படாத சுகாதார வளாகம் என திருத்தங்கல் பாண்டியன் நகர், சத்யா நகர் பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.

திருத்தங்கல் பாண்டியன் நகர் சத்யா நகரில் சேதமடைந்த ரோடு முக்கிய பிரச்னையாக உள்ளது. பாண்டியன் நகரில் இருந்து சத்யா நகர் செல்லும் ரோடு சிவகாசி மெயின் ரோட்டில் இணையும். செங்கமல நாச்சியார்புரம், பாண்டியன் நகர், சத்யா நகர் பகுதி மக்கள் இதன் வழியில் சிவகாசிக்கு வருவர். இந்நிலையில் ரோடு ஆங்காங்கே சேதமடைந்து விட்டது. மிகப்பெரிய பள்ளமாக மாறியதால் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது.

மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. இதே ரோட்டில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் அடிக்கடி உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகின்றது. தெரு நாய்கள் அதிக அளவில் நடமாடி மக்களை அச்சுறுத்துகிறது. பாண்டியன் நகர் மெயின் ரோட்டில் செயல்படாமல் இருந்த சுகாதார வளாகத்தில் மராமத்து செய்தும் இதுவரையில் பயன்பாட்டிற்கு வரவில்லை.

சத்யராஜ், தனியார் ஊழியர்: பாண்டியன் நகரில் இருந்து சத்யா நகர் செல்லும் ரோட்டில் இருபுறமும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வாறுகால் அமைக்கப்பட்டது. துவக்க காலங்களில் இப்பகுதி குடியிருப்புகளின் கழிவுநீர் வாறுகால் வழியாக வெளியேறிச் சென்றது. ஆனால் தற்போது ரோட்டில் இருபுறமும் உள்ள வாறுகால் சேதமடைந்து துார்ந்துள்ளது. மேலும் ஆங்காங்கே முட் புதர்கள், செடிகளும் முளைத்து வாறுகாலை மறைத்துள்ளது. தவிர குப்பைகளால் வாறுகால் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற வழி இன்றி ஒரே இடத்தில் தேங்கி விடுகின்றது.

சரவணகுமார், தனியார் ஊழியர்: பாண்டியன் நகர் செல்லும் வழியில் போலீஸ் ஸ்டேஷன் அருகே பெரிய பள்ளம் உள்ளது. நகரின் மொத்தக் கழிவுகளும் இதில் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகின்றது.

Advertisement