மனகசப்புகளை மறந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் இ.பி.எஸ்., நல்ல கூட்டணி அமைப்பார்: வேலுமணி

ஓமலுார்: ''சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ்., நல்ல கூட்டணி அமைப்பார்; கவலை வேண்டாம். மனகசப்புகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றிட வேண்டும்,'' என, ஓமலுாரில் நடந்த, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.



சேலம் புறநகர் மாவட்டம், ஓமலுார் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., ஓமலுார் மேற்கு ஒன்றியம், தாரமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம், நேற்று ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தலைமையில் நடந்தது.சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: வரும் தேர்தலின் போது, திண்ணை பிரசாரம் முக்கியமானது. குடும்ப உறுப்பினர்களை கட்சியில் இணைக்க வேண்டும். கிளை செயலர்கள் தான், அ.தி.மு.க., பேரியக்கத்தின் முதுகெலும்பு. கிளை செயலராக இ.பி.எஸ்., பணியாற்றி, தற்போது பொதுச்செயலராக உள்ளார்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படும். கிளை செயலர்களுக்கு வசந்த காலம் வரும். இ.பி.எஸ்., ஆட்சியில் ஓமலுார் தொகுதியில் மட்டும், 500 கோடி ரூபாய்க்கு, தார் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியில் சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்வு, ஒரு கிலோ அரிசி விலை, 80 ரூபாய் என்பது உள்ளிட்ட பல்வேறு உயர்வால் மக்கள் துன்பப்படுகின்றனர். வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம் நடத்தி வெற்றி கண்டது. அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. மக்கள் மத்தியில் ஒரே பேச்சு என்ன
வென்றால், அ.தி.மு.க., ஆட்சி எப்போது வரும் என்பது தான். 100 ஏரி நிரப்பும் திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் என, பல திட்டங்களுக்கு முனைப்பு காட்டியவர் இ.பி.எஸ்.,
தி.மு.க., ஆட்சியில் ஒரு திட்டம் கூட நிறைவேற்றவில்லை. திட்டமே இல்லாத அரசாக, தி.மு.க., அரசு உள்ளது. ஆளும் கட்சியே ஒன்றும் செய்யாத நிலையில், சேலம் எம்.பி., என்ன செய்யப்போகிறார் என தெரியவில்லை. லோக்சபா தேர்தல் வேறு, சட்ட
சபை தேர்தல் வேறு என, மக்களுக்கு நன்றாக தெரியும். அ.தி.மு.க., ஒரு தோல்வியை சந்தித்தால், அடுத்து மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது, கடந்த கால சரித்தர உண்மையாகும்.
தி.மு.க., ஆட்சியில், அ.தி.மு.க.,வினர் பொய் வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். பூத் வாரியாக ஏஜென்டுகள் ஒவ்வொருவரும் தலா, 30 வீடுகளை மட்டும் சந்தித்து, அவர்களது ஓட்டை பெற்றால் போதும் எளிதாக வெற்றி பெறமுடியும். சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ்., நல்ல கூட்டணி அமைப்பார். கவலை வேண்டாம். மனகசப்புகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், சேலம் மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாசலம், எம்.எல்.ஏ.,க்கள் ஓமலுார் மணி, ஆத்துார் ஜெயசங்கரன், வீரபாண்டி ராஜமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணன், வெற்றிவேல், ஜெ.,பேரவை துணை செயலர் விக்னேஷ், ஒன்றிய செயலர்கள் ராஜேந்திரன், மணிமுத்து, அசோகன், கோவிந்தராஜ், காடையாம்பட்டி ஒன்றிய செயலர்கள் சித்தேஸ்வரன், சுப்ரமணி ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement