கொட்டித் தீர்க்கும் கனமழை! ஏர்போர்ட் செல்பவர்கள் இதை நோட் பண்ணுங்க

1

சென்னை; சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.



சென்னையில் கனமழை விடாது பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி., நகர், கிண்டி, சைதை, தேனாம்பேட்டை, தி.நகர், அமைந்தகரை, ஷெனாய் நகர், மயிலாப்பூர், மந்தைவெளி என பல பகுதிகளில் மழை ஓயவில்லை. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகளில் தேங்கும் நீரை, மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

ஒவ்வொரு மண்டலத்திற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 8 விமானங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கனமழை, போதிய பயணிகள் வருகை இல்லாததால் சென்னையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு, அந்தமான், புதுடில்லி, மஸ்கட் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. ஏராளமான பயணிகள் தங்களின் பயணத்தையும் ரத்து செய்துள்ளனர். இதனால் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருக்கிறது.

விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளதால் அதற்கு ஏற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Advertisement