மழையால் குளிர்ந்த சேலம் இடிதாக்கி பசுமாடு பலி

சேலம்: அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில், அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது. சேலத்தில் நேற்று முன்தினம் மாலை, 3:00 மணியளவில் இடி,மின்னலுடன் கூடிய பெய்த கனமழை அரைமணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.



அதன்பின் விட்டுவிட்டு, இரவு முழுவதும் மழை தொடர்ந்தது. இதேபோல, மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அதிகபட்சம் சேலத்தில், 43.6 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. நத்தக்கரை, 35, ஏற்காடு, 19.2, தம்மம்பட்டி, 14, மேட்டூர், 13.2, கெங்கவல்லி, 12, டேனிஷ்பேட்டை, வீரகனுார் தலா. 8, இடைப்பாடி, 6.4, கரியகோவில், 6, ஆணைமடுவு, 4, ஏத்தாப்பூர், 3, ஆத்துார், 2.4, சங்ககிரி, 1.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
மழை காரணமாக, மாநகரின் தாழ்வான பகுதிகளில் குளம்போல தண்ணீர் தேங்கி நின்றது. குறிப்பாக சாக்கடை கலந்த மழைநீர், குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டதால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். தலைவாசல் அடுத்த காமக்காப்பாளையம், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பழனிமுத்து என்பவருக்கு சொந்தமான பசுமாடு, இடிதாக்கியதில் இறந்தது. கெங்கவல்லியில் காளை மாடு இறந்தது.சேலம் தாதகாப்பட்டி, பஞ்சதாங்கி ஏரி, எம்.ஜி.ஆர்.,நகரில் லதா என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுவர், மழைநீரில் இடிந்து சேதமாகிவிட்டது. சேலத்தில் நேற்று காலை முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மிதமழை, கனமழை என, மாறி, மாறி விட்டுவிட்டு பெய்வதால், பூமி குளிர்ந்துள்ளது. மழையால் மக்கள் நடமாட்டம் குறைந்து, குடை பிடித்தபடி, வெளியே சென்று வருகின்றனர்.

Advertisement